சாதி, மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் டி.டி.வி.தினகரன் பிரசாரம்


சாதி, மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் டி.டி.வி.தினகரன் பிரசாரம்
x
தினத்தந்தி 12 April 2019 4:45 AM IST (Updated: 11 April 2019 9:41 PM IST)
t-max-icont-min-icon

சாதி, மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என பிரசாரத்தின்போது டி.டி.வி.தினகரன் கூறினார்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டையில் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இந்து கடவுள் குறித்து தனது இஷ்டத்துக்கு பேசிவிட்டு பின்னர் மக்களின் எதிர்ப்பை பார்த்து பயந்து இந்துகளுக்கு நான் எதிரி அல்ல என்கிறார்.

திராவிடர் கழக தலைவர் வீரமணி பொள்ளாச்சி பாலியல் கொடிய சம்பவத்தை கிருஷ்ண பகவானுடன் ஒப்பிட்டு பேசுகிறார். இதை எல்லாம் பார்க்கும் மக்கள், அரசியல்வாதிகளை பற்றி என்ன நினைப்பார்கள்? தேர்தலுக்காக சாதி, மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு இந்த தேர்தலில் மக்கள் முடிவு கட்ட வேண்டும். மத்திய அரசில் நீண்ட காலம் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்துக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை.


பிரதமர் மோடியால் எல்லோருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. கருப்பு பணத்தை கைப்பற்றுகிறேன் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மக்களை பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாக்கினார்.

பணத்துக்காக வாக்களித்தால் 5 ஆண்டுகள் நம்மை அடகு வைக்க வேண்டி வரும். ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் மோடியுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டை வஞ்சித்து விட்டார்கள்.


தமிழகம் தலை நிமிரவும், தமிழர் வாழ்வு மலரவும், விவசாயத்தை மீட்டெடுக்கவும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக உருவாக்கவும் அ.ம.மு.க. பாடுபடும். பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு முழுமையான நிவாரணம் பெற்றுத்தரவும், தென்னை விவசாயிகளின் நலன் கருதி பேராவூரணியில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்கவும், கடைமடை பகுதி நீர் ஆதாரத்தை பெருக்க காட்டாறுகளில் 15 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story