பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வண்டல் மண் விற்பனை மூலம் ரூ.700 கோடி வருவாய் ஈட்ட திட்டம் அதிகாரிகள் தகவல்


பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வண்டல் மண் விற்பனை மூலம் ரூ.700 கோடி வருவாய் ஈட்ட திட்டம் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 12 April 2019 4:00 AM IST (Updated: 11 April 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளை தூர்வாருவதினால் கிடைக்கும் வண்டல் மண் விற்பனை மூலம் ரூ.700 கோடி அரசுக்கு வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் சோழவரம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏரி சென்னையில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை மற்றும் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மாநகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்காக புழல் ஏரியும், சோழவரம் ஏரியும் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருவள்ளூர் பிரதான சாலை, புழல் சந்திப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு செல்ல சோழவரம் ஏரியின் கால்வாய் பகுதிகள் பயன்படுகிறது. தற்போது இந்த ஏரியை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் முழு கொள்ளளவில் தண்ணீரை நிரப்புவதற்காக ஏரிகள் தூர்வார முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் 38 லட்சம் கனமீட்டர் அளவு வண்டல் மண் அப்புறப்படுத்தப்பட உள்ளது. 1,200 லாரிகளில் மண் எடுத்து செல்லப்பட்டு உள்ளன. தூர்வாரப்படும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை ரூ.700 கோடிக்கு விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக மாவட்ட நிர்வாகங்களில் இருந்து வரும் உத்தரவுகளை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். ஏரி முழுமையாக தூர்வாரிய பின்னர் 250 மில்லியன் கன அடி தண்ணீரை கூடுதலாக சேமித்து வைக்க முடியும். அத்துடன் ரூ.5.42 கோடி மதிப்பில் ஏரியில் பராமரிப்பு பணிகளும் செய்யப்பட உள்ளன.

தொடர்ந்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் ரூ.20 கோடி மதிப்பில் தூர்வாரப்பட உள்ளது. அத்துடன் ஏரிகளில் நீண்ட நாள் கிடப்பில் கிடக்கும் பணிகளான ஷட்டர்கள் பழுது பார்ப்பது, ஏரிகளின் மேல் சாலைகள் அமைப்பது, வாய்க்கால் சீரமைப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகள் செய்யப்பட உள்ளன.

ஏரிகளில் நடக்கும் அனைத்து முன்னேற்ற பணிகளும் இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய உள்ளோம். அனைத்து ஏரிகளும் தூர்வாரும் பணி முடிய 5 ஆண்டுகள் வரை ஆகலாம். ஒரு ஏரி தூர்வாரினால் கூடுதலாக 2 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீரை கூடுதலாக சேமிக்க முடியும்.

தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளவான 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடியில் 80 சதவீதம் மட்டுமே சேமிக்க முடிகிறது. ஏரிகள் தூர்வாரும் பணி முடிந்தால் வெள்ளப்பெருக்கை தவிர்ப்பதுடன், மாநகர பகுதிக்கு கூடுதலான மாதம் தண்ணீர் வினியோகம் செய்ய முடியும். கோர்ட்டில் வழக்கு இருப்பதால் பூண்டி ஏரி தூர்வாரும் பணி தொடங்க காலதாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
1 More update

Next Story