பொன்னேரி அருகே அனுமதியின்றி தண்ணீர் விற்பதை கண்டித்து மறியல்


பொன்னேரி அருகே அனுமதியின்றி தண்ணீர் விற்பதை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 12 April 2019 4:00 AM IST (Updated: 11 April 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள புதூர் ஊராட்சியில் அடங்கியது கொக்குமேடு கிராமம். இங்குள்ள கிராமத்தின் நிலங்களுக்கு பெருங்காவூர் ஏரி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். கொக்குமேடு கிராமத்தை சுற்றி பெருங்காவூர் ஊராட்சியில் அடங்கிய பெருங்காவூர், மேட்டூர், மேட்டுப்பாளையம், பெரியகாலனி, காந்திநகர் மேட்டுகாலனி ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரமாக விவசாயம் விளங்குகிறது.

இப்பகுதி மக்கள் பெருங்காவூர் ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெருங்காவூர் ஏரிக்கு அருகே உள்ள கொக்குமேடு பகுதியில் தனிநபர்கள் சிலர் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி தினமும் 200 லாரிகளுக்கு மேல் தண்ணீர் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெருங்காவூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி சோழவரம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கொக்குமேடு கிராமத்தில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதா? என தகவல் கேட்டு இருந்தார். அதன்படி வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணைக்கு பின்னர் கடந்த மாதம் குறிப்பிட்ட 3 நபர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் அளிக்கப்படவில்லை எனவும் சட்டவிரோதமாக செயல்படுவதால் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்வதை கைவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிப்பு நகலை வழங்கினார்.

இதனையடுத்து பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் பெருங்காவூர் ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கம், கொக்குமேடு கிராமத்தில் தனிநபர்கள் 7 ஆழ்துளை கிணறுகள் அமைத்து இரவு பகல் பாராமல் 200-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருவதால் எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் உள்ளது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், பொன்னேரி கோட்டாட்சியர், தாசில்தார், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு புகார் செய்தனர்.

ஆனால் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து பெருங்காவூர் ஏரி நீரை பயன்படுத்தும் சங்கத்தை சேர்ந்த கிராமமக்கள் கொக்குமேடு கிராமத்தின் வழியாக செல்லும் ஒரக்காடு அருமந்தை நெடுஞ்சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரமேஷ், வினோத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story