உடல் நலம் பாதிப்பால் வாழ்க்கையில் வெறுப்பு: விஷம் குடித்து முதியவர் தற்கொலை


உடல் நலம் பாதிப்பால் வாழ்க்கையில் வெறுப்பு: விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 12 April 2019 3:45 AM IST (Updated: 11 April 2019 11:33 PM IST)
t-max-icont-min-icon

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முதியவர் “என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்,

கிருமாம்பாக்கம் அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 80). முதுமை காரணமாக இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைகள் எடுத்தும் உடல் நலம் சீராகவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

சம்பவத்தன்று அவர் உருக்கமாக ஒரு கடிதம் எழுதினார். அதில், “யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. நோய் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல” என்று எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்துவிட்டார்.

இதில் மயங்கிக்கிடந்த அவரை, அவருடைய மகன் ராஜாராமன் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்றுக்காலை சுப்பிரமணியன் பரிதாபமாகச் செத்தார்.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வில்லியனூரை அடுத்த மேல் திருக்காஞ்சி சுப்ரீம் நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 45), கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி துளசி (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சங்கரலிங்கத்துக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story