சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 11 April 2019 10:30 PM GMT (Updated: 11 April 2019 7:03 PM GMT)

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி தேவார பாடல்களை பாடிய நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும். புராண காலத்தில் பிரமபுரம், வேணுபுரம், தோணிபுரம், சிரபுரம் என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. நான்கு புறமும் கோபுரங்களுடன் பிரமாண்டமாக காட்சி தரும் இந்த கோவிலில், பிரம்மபுரீஸ்வரர் திருநிலைநாயகி அம்மனுடன் அருள் பாலிக்கிறார். மேலும், இங்கு அஷ்ட பைரவர்களும் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

இந்த கோவிலில் திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. முன்பு ஒருமுறை திருஞானசம்பந்தர் சிறுபிள்ளையாக இருந்தபோது, பார்வதி தேவியான பெரியநாயகி அம்மை (திருநிலைநாயகி அம்மன்) ஞானப்பால் வழங்கி, அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக தல வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் (ஞானப்பால்) வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு சட்டைநாதர் கோவிலில் நேற்று திருமுலைப்பால் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி திருஞானசம்பந்தர், பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து புறப்பட்டு பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருளினார். அங்கு, திருஞானசம்பந்தருக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடு நடைபெற்றது. அப்போது திருநிலைநாயகி அம்மன் பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருளினார். இதனையடுத்து பகல் 1.30 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் முன்னிலையில் தங்க குடத்தில் உள்ள பாலை கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து உமாமகேஸ்வரர், உமாமகேஸ்வரி, திருநிலைநாயகி அம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சி அளித்தார். அப்போது சாமி, அம்மன் மற்றும் திருஞானசம்பந்தருக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பால், சாமிக்கு நிவேத்தியம் செய்யப்பட்டது. முன்னதாக இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் அருளாசி வழங்கினார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கணக்கர் செந்தில் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து இருந்தனர். விழாவையொட்டி சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) சமணர்கள் தோற்றோடுதல் நிகழ்ச்சியும், நாளை (சனிக் கிழமை) புஷ்பவிமான காட்சியும், 14-ந் தேதி சகோபுரத்தில் சாமிகள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 15-ந் தேதி திருக்கல்யாணமும், 16-ந் தேதி பிச்சாண்டவர் உற்சவமும், 17-ந் தேதி மற்றும் 18-ந் தேதி தேரோட்டமும், 19-ந் தேதி தீர்த்தவாரியும், 20-ந் தேதி மவுன உற்சவமும், 21-ந் தேதி எதிர்காட்சி உற்சவமும், 22-ந் தேதி தெப்போற்சவமும், 23-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 26-ந் தேதி முத்துச்சட்டைநாதர் உற்சவமும் நடைபெறுகிறது.

Next Story