மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார்: அ.தி.மு.க. அரசின் திட்டங்களை கூறி நான் ஆதரவு திரட்டி வருகிறேன் ஓமலூர் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார்: அ.தி.மு.க. அரசின் திட்டங்களை கூறி நான் ஆதரவு திரட்டி வருகிறேன் ஓமலூர் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 11 April 2019 11:30 PM GMT (Updated: 11 April 2019 7:13 PM GMT)

‘மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் நான் அ.தி.மு.க. அரசின் திட்டங்களை கூறி ஆதரவு திரட்டி வருகிறேன்’ என்று ஓமலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி பகுதிகளில் திறந்த வேனில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் நிலையான ஆட்சி அமையவும், திறமையான மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். ஆனால் தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார். ஆனால் மற்ற தலைவர்கள் அதை ஏற்கவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துள்ள ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும். தேவையான நிதியை கேட்டு பெற முடியும். தமிழகத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இதுவரை 35 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து முடித்திருக்கிறேன். தற்போது சேலத்தை சேர்த்தால் 36-வது தொகுதி ஆகும்.

அ.தி.மு.க. ஆட்சியில் செய்திருக்கிற திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி நான் ஆதரவு திரட்டி வருகிறேன். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து தினமும் கதை கூறி வருகிறார். அதாவது, என்னை பற்றி குறை கூறுவதே மு.க.ஸ்டாலினுக்கு வழக்கம். என்னை பார்த்து அவர் பயப்படுகிறார். மு.க.ஸ்டாலினை நினைத்தால் எனக்கு பாவமாகத்தான் இருக்கிறது.

ஜெயலலிதாவின் இறப்புக்கு பின் இந்த ஆட்சி கலைந்து விடும் என்றும், அ.தி.மு.க. உடைந்துவிடும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.

ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறோம். மத்தியில் 15 ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்த்தார்களா?, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா?. தி.மு.க.வின் குடும்பத்தினர் மட்டுமே பதவி சுகத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பார்கள். மக்களுக்கு எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. காவிரி நதிநீர் பிரச்சினைக்காக தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலை நாடாளுமன்றத்தில் நமது எம்.பி.க்கள் ஒலிக்க செய்தார்கள். இதனால் நாடாளுமன்ற அவையே முடக்கப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சினை அ.தி.மு.க. ஆட்சியில் தான் தீர்க்கப் பட்டது.

அதேபோல், கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம். தேர்தலில் வெற்றி பெற்று முதல் நாடாளுமன்ற அவையிலேயே அத்திட்டம் பற்றி வலியுறுத்தப்படும். அந்த திட்டம் நிறைவேற்றும் பட்சத்தில் ஓமலூர் மட்டுமின்றி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பி உரிய காலங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும்.

தமிழகத்தில் 2006-2011 வரை நடந்த தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த 3 மாதத்தில் மின் வெட்டு சரிசெய்யப்பட்டது. 16ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

கடந்த 2006-2011 ஆட்சியில் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராகவும், அவரது தந்தை கருணாநிதி முதல்-அமைச்சராகவும் இருந்தார்கள். அப்போது, மதுரை பக்கமே மு.க.ஸ்டாலின் சென்றது கிடையாது. ஆனால் கடந்த வாரம் மதுரையில் பிரசாரத்திற்கு சென்றபோது, அவர், டி-சர்ட் அணிந்து கொண்டு காலையில் வாக்கிங் செல்கிறார். அப்படியென்றால், தமிழகத்தில் யார் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதற்கு மு.க.ஸ்டாலினே சான்று. இதனால் வேண்டும் என்றே அவர் இந்த அரசு மீது குறைகளை கூறி வருகிறார்.

பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக ரூ.1,000 வழங்கினோம். அதேபோல் ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ததால், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

ஓமலூர் சட்டமன்ற தொகுதி எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். தற்போது நம்முடன் கூட்டணி கட்சிகள் இணைந்திருப்பதால் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

முதல்-அமைச்சர் பிரசாரத்தின்போது, முன்னாள் அமைச்சர் பொன்னையன், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாஜலம், வெற்றிவேல், மனோன்மணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story