நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில், தி.மு.க. ஆதரவு யாருக்கு? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி


நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில், தி.மு.க. ஆதரவு யாருக்கு? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி
x
தினத்தந்தி 12 April 2019 4:45 AM IST (Updated: 12 April 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளில் யாருக்கு ஆதரவு என்று கூற முடியுமா? என மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

நாமக்கல், 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து திறந்த வேனில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் பொய்யேரிக்கரையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:-

தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றால் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. தி.மு.க. குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனி என்ற வைகோ, தற்போது தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து உள்ளார். கொங்குபேரவை ஒரு அமைப்பு. அந்த அமைப்பு இன மக்களுக்கு நன்மைகளை பெற்று தர தொடங்கப்பட்டது.

இதற்கு அரசியல் சாயம் பூசி ஒருசிலர் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பை பயன்படுத்துகிறார்கள். தி.மு.க.வுக்கு அந்த அமைப்பை அடமானம் வைத்த மாதிரி, அவர்கள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுகின்றனர். ஒரு கட்சியில் உறுப்பினர் ஆனால் தான் அந்த கட்சியின் சின்னம் கிடைக்கும். இங்குள்ள வேட்பாளர் கொங்கு பேரவையில் இருக்கிறாரா? தி.மு.க.வில் உறுப்பினராகி அந்த சின்னத்தில் போட்டியிடுகிறாரா? என மக்கள் கேட்கிறார்கள்.

வைகோவும் ம.தி.மு.க. என்ற கட்சியை வைத்து கொண்டு இருக்கிறார். அவரது வேட்பாளர் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தி.மு.க. வேட்பாளரா? ம.தி.மு.க. வேட்பாளரா?. இவர்கள் மக்களை குழப்பி வருவதால் சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறோம்.

நம்முடைய கூட்டணியை பொறுத்த வரையில் ஒருமித்த கருத்தோடு மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என அவரை ஆதரித்து வருகிறோம். எதிர்க்கட்சியினர் அப்படி இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளன. கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் எதிர்த்து போட்டியிடுகின்றன. தமிழகத்தில் காங்கிரசுக்கு கம்யூனிஸ்டு கட்சியினர் ஓட்டு கேட்கிறார்கள். கம்யூனிஸ்டுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு கேட்கின்றனர். இது சந்தர்ப்பவாத கூட்டணி தானே?.

இங்கு ஒரு கூட்டணி, அங்கு ஒரு கூட்டணி. இது மாநிலத்திற்கு நடைபெறும் தேர்தல் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு நடைபெறும் தேர்தல். மாநிலத்திற்கு மாநிலம் கூட்டணி மாற்றி, இவர்களால் எப்படி நிலையான ஆட்சி தரமுடியும்? நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும்?

மு.க.ஸ்டாலின், நீங்கள் கேரளாவில் காங்கிரசை ஆதரிக்கிறீர்களா? கம்யூனிஸ்டு கட்சியை ஆதரிக்கிறீர்களா? சொல்லுங்கள். உங்கள் கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்று உள்ளன. நீங்கள் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என அறிவித்து உள்ளர்களே. எல்லோரும் வெற்றி பெற்றால் தானே அவரை பிரதமர் ஆக்க முடியும். கேரளாவுக்கும், தமிழகத்திற்கும் அவர்கள் கட்சியில் ஒற்றுமை இல்லை. இவர்கள் ஒன்றிணைந்து பிரதமரை தேர்வு செய்து, எப்படி நிலையான ஆட்சியை தரமுடியும்?

நமது கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரும்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை பெற முடியும். கொள்கை இல்லாத கூட்டணி தி.மு.க. தலைமையிலான கூட்டணி. அவர்களுக்கு மாநிலத்திற்கு மாநிலம் கொள்கை வேறுபாடு உள்ளது. ஒற்றுமை இல்லாத வேட்பாளர்களை நிறுத்தி, மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்கிறார், மு.க.ஸ்டாலின். இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம், ஒழுங்கை பேணி காப்பதில் இந்தியாவிலேயே முதலிடம் வகித்து வருகிறது. 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் ஸ்டாலினால் மதுரைக்கு செல்ல முடியவில்லை. ஆனால் கடந்த வாரம் மதுரைக்கு சென்ற ஸ்டாலின் நடைபயிற்சி சென்றார். சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் அங்கு நடைபயிற்சி செல்ல முடிந்தது.

அதேபோல் பாலியல் பலாத்காரம் அதிகரித்து விட்டதாக ஸ்டாலின் கூறி வருகிறார். எல்லாம் தி.மு.க.வினரால் வந்தது. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், தனது வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். தற்போது ஜெயிலில் உள்ளார். எப்போது பார்த்தாலும் பழனிசாமி பதில் சொல்லவில்லை என்கிறார், ஸ்டாலின். ஆனால் இதுவரை ராஜ்குமாரை ஏன் மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கவில்லை என்பதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

இதேபோல் ரெயிலில் கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தி.மு.க. பிரமுகர் ஒருவர் அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்கியது அனைவருக்கும் தெரியும். பிரியாணி கடை, ஓட்டலுக்கு போய் சாப்பிடுவது, பணம் கேட்டால் உரிமையாளரை அடிப்பது என்று அவர்களின் அராஜகம் எல்லை மீறுகிறது. அடுத்த நாள் ஸ்டாலின் போய் அங்கு பஞ்சாயத்து செய்கிறார். கட்சி தலைவரே சென்று கட்ட பஞ்சாயத்து செய்தால் அவர் அந்த கட்சிக்கு தலைவரா? கட்டப்பஞ்சாயத்து தலைவரா?

இப்படி எல்லாம் வைத்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று ஸ்டாலின் சொல்வதற்கு என்ன தகுதி, அருகதை உள்ளது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. இப்போதே அராஜகத்தில் ஈடுபட்டால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா?

இது எல்லாம் மக்களுக்கு தெரியாது என நினைக்கிறார். மக்கள் அவரை விட அறிவாளிகள். உண்மை நிலையை அறிந்து மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். பொய்க்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கும்.

கோடநாடு பிரச்சினை பற்றி நான் பலமுறை சொல்லி உள்ளேன். சயன், மனோஜ் ஆகிய இருவர் கோடநாடு போய் கொள்ளை அடிக்கிறார்கள். வரும் வழியில் ஒருவரை கொலை செய்து விடுகிறார் கள். அவர்களை அ.தி.மு.க. அரசு கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது. வழக்கு நடந்து வருகிறது. அவரை பயன்படுத்தி பணம் கொடுத்து பேட்டி அளிக்க சொல்லி, அதில் ஒரு முதல்-அமைச்சரையே குற்றவாளி என்று சொல்லுகிறபோது, சாதாரண மக்களை ஆட்சியில் இருந்தால் விடுவார்களா? எப்படி எல்லாம் பொய் வழக்கு போடுவார்கள்.

என் மீது தவறான குற்றச்சாட்டு சொன்னதற்காக சயன், மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால், தி.மு.க. வக்கீல்கள் அவருக்கு வாதாடுகிறார்கள். தி.மு.க. தலைவர் உத்தரவின் பேரில் கட்சி நிர்வாகிகள் அந்த கொலை குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு போய் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் எடுக்கிறார்கள்.

இந்த கூலிப்படையினர் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது பாலியல் வழக்கு, ஆள்கடத்தல் வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்கு, கொலை வழக்கு, திருட்டு வழக்கு உள்ளது. இவர்களை ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஜாமீனில் எடுத்தால், அவர்களை என்ன என்று சொல்வது? கூட்டு களவாணி, அருமையான பெயர்.இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:- மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதிக்கு சமாதி அமைக்க தமிழக அரசு இடம் தரவில்லை என குற்றம் சாட்டி பேசி உள்ளார். முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் காஞ்சீபுரம் பட்டேல் சாலையில் ரூ.300 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை, கருணாநிதி சமாதிக்கு ஒதுக்கி தந்தேன். அதை ஸ்டாலின் ஏற்கவில்லை. இதே கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது காமராஜருக்கு சமாதி அமைக்க மெரினா கடற்கரையில் இடம் தரவில்லை. மாறாக பட்டேல் சாலையில் தான் இடம் ஒதுக்கினார். மெரினாவில் முன்னாள் முதல்-அமைச்சர்களுக்கு இடம் இல்லை என்று கூறியவர் கருணாநிதி.

கருணாநிதி இறந்தவுடன் ஸ்டாலின் என் கைகளை பிடித்து கொண்டு, மெரினாவில் சமாதி அமைக்க இடம் வேண்டும் என கேட்டார். நான் சட்ட நிபுணர்களிடம் பேசியபோது, மெரினாவில் சமாதி அமைக்க சட்டத்தில் இடம் இல்லை எனக் கூறி விட்டனர். பிறகு ஜெயலலிதா சமாதி அமைத்தபோது வழக்கு போட்டவர்கள், வழக்கை வாபஸ் பெற்றால் இடம் தரலாம் என்ற நிலை ஏற்பட்ட போது இரவோடு, இரவாக வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது. இந்த வழக்குகளை ஜெயலலிதா சமாதிக்கு எதிராக போட தூண்டியவர் தான் ஸ்டாலின். இவரை போன்று சிறுமதி எங்களுக்கு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தேர்தல் பிரசாரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story