மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் பிரசாரம்:தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றியது இல்லைஎடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + Preaching in Dharmapuri District: DMK Election promises never passed Edappadi Palinasamy Talk

தர்மபுரி மாவட்டத்தில் பிரசாரம்:தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றியது இல்லைஎடப்பாடி பழனிசாமி பேச்சு

தர்மபுரி மாவட்டத்தில் பிரசாரம்:தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றியது இல்லைஎடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றியது இல்லை, என்று தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார்.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மத்தியில் நிலையான ஆட்சி, திறமையான நிர்வாகம் அமைவதற்காக இந்த தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்பட வேண்டும்.

சில துரோகிகளின் செயலால் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் கடந்த தேர்தலில் கடுமையான உழைப்பின் மூலம் அ.தி.மு.க. ஆட்சியை தமிழகத்தில் மலர செய்தார். கேட்பார் பேச்சை கேட்டு சில எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு செய்த துரோகத்தால் நாம் இப்போது இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறோம்.

இந்த தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தின் நலன் கருதியும், தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களை பெறவும், தமிழகத்துக்கு தேவையான நிதியை பெற்று வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவும், வலிமையான கூட்டணியை உருவாக்கி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறோம்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மத்திய அரசால் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வறட்சியை போக்க காவிரி உபரிநீரை நீரேற்றம் செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழைநீரை தேக்க வாய்ப்புள்ள இடங்களில் இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டு வறட்சி நீங்கி, விவசாயம் வளம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலத்தில் ரூ.900 கோடி மதிப்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளின் உற்பத்திக்கான மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு கால்நடை வளர்க்கும் விவசாயிகள் இரட்டிப்பு லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடத்தூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் உபரிநீரை ஈச்சம்பாடி அணையில் இருந்து பொதியன்பள்ளம் அணைக்கட்டு வழியாக 18 ஏரிகளுக்கு கால்வாய்கள் அமைத்து பாசன வசதி ஏற்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இங்கு என்னிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

கடத்தூர் பகுதியில் 10 தடுப்பணைகள், 13 கால்நடை மருந்தக கட்டிடங்கள், 11 பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பகுதி விவசாயிகள் வளம்பெறும் வகையில் அனைத்து விதமான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தவறான குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை விசாரணை மூலம் கண்டறிந்தது இந்த அரசு தான். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டதும் இந்த அரசு தான். இப்போது சி.பி.ஐ. விசாரணை நடைபெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்கும்.

தமிழக அரசு பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசின் சிறப்பு விருதுகளை பல்வேறு துறைகளை நாம் பெற்றுள்ளோம்.

இந்தியாவில் உள்ள 15 ஆயிரம் போலீஸ் நிலையங்களில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் நம்பர்-1 போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த போலீஸ் நிலையத்துக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு பராமரிக்கப்படுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.

கண்ணுக்கு தெரியாத காட்டிலும் ஊழல் செய்த கட்சி தி.மு.க.. இதனால் ஊழலை பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தி.மு.க. சார்பில் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டங்களை மத்தியில் ஆளும்கட்சியாக இருந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும். தி.மு.க. தரும் தேர்தல் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றியதில்லை. ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரும் திட்டத்தை அறிவித்தனர். உங்களில் யாருக்காவது நிலம் கிடைத்ததா? (இவ்வாறு மக்களை பார்த்து கேட்டார்)

நிறைவேற்ற முடியாத, பொய்யான தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது தி.மு.க.வின் வழக்கம். அவர்கள் சொன்ன எந்த திட்டத்தையும் நிறைவேற்றியது இல்லை. தற்போது நடப்பது நாடாளுமன்ற தேர்தல். 2021-ம் ஆண்டு தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்.

மொரப்பூர் பகுதியில் நாகசமுத்திரம் அணைக்கட்டு திட்டம் மூலம் இந்த பகுதியில் 30 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரிநீரை மொரப்பூர் பகுதி ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை, சென்னாக்கால் தடுப்பணை திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும்.

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முயற்சி மூலம் மொரப்பூர்-தர்மபுரி இடையே ரெயில்பாதை அமைக்கும் திட்டம் ரூ.358 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.

அரூர் அருகே வறட்டாறு குறுக்கே எல்லைப்புடையான்பட்டி பகுதியில் தடுப்பணை கட்டப்படும். நானும் விவசாயி தான். குடிமராமத்து பணி மூலம் 3 ஆயிரம் ஏரிகளை தூர்வாரி சீரமைத்து உள்ளோம். வாணியாறு அணையின் இடதுபுற கால்வாயை 14 கி.மீ. நீடிப்பு செய்து பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் தொகுதிக்கு உட்பட்ட 18 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரவும், 10 தடுப்பணைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த கூட்டங்களில் அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப்பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர், பா.ஜ.க. மாவட்ட தலைவர் வரதராஜன், த.மா.கா. மாவட்ட தலைவர் ஜெகதீசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து கொண்டிருக்கிறார்கள் “அ.தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை” எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மட்டுமே அ.தி.மு.க. அறிவிக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதது என்றும், மக்களுக்கு நிறை வேற்ற முடியும் திட்டங் களை மட்டுமே அ.தி.மு.க. அறிவிக்கும் என்றும் வாணியம்பாடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழகம் முதலிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது’ என்று தாரமங்கலத்தில் நடந்த புறவழிச்சாலை திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
5. மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகம் என்று தேர்தல் பிரசாரத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை