ஊத்துக்கோட்டை அருகே தண்ணீர் இல்லாததால் 800 ஏக்கர் நெல் பயிர்கள் கருகின


ஊத்துக்கோட்டை அருகே தண்ணீர் இல்லாததால் 800 ஏக்கர் நெல் பயிர்கள் கருகின
x
தினத்தந்தி 11 April 2019 10:30 PM GMT (Updated: 11 April 2019 7:32 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே தண்ணீர் இல்லாததால் 800 ஏக்கர் நெல் பயிர்கள் கருகின.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடதில்லை, உப்பரபாளையம், அக்ராரம், மாம்பாக்கம் கிராமங்களில் விவசாயிகள் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல்பயிர் சாகுபடி செய்திருந்தனர். தங்க நகைகள் அடகு வைத்து, வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து நெல் பயிரிட்டிருந்தனர். பருவ மழை பொய்த்து போனது ஒருபுறம் இருக்க முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே கடும் வெயில் கொளுத்தியது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் வயல் வெளிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போனது.

இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் கருகின. குறிப்பாக மாம்பாக்கம் கிராமத்தில் மட்டும் 450 ஏக்கர் நெல்பயிர்கள் கருகின. வடதில்லை, உப்பரபாளையம், மாம்பாக்கம் கிராமங்களை ஒட்டி ஆரணி ஆறு செல்கிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு ஆரணி ஆற்றில் மணல் குவாரியை இயக்கியது. ஆரணி ஆற்றில் சுமார் 30 அடி ஆழம் வரை மணல் அள்ளியதும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததற்கு காரணம் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வர மாம்பாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் அனைவரும் கையெழுத்திட்ட பிரதிகளை 4 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசுக்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில் 2015-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது வடதில்லை பகுதியில் அரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு இது வரை செயல்படுத்்தப்படாமல் உள்ளது. கருகிய நெல்பயிருக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story