கரூரில் இயங்கி வரும் தனியார் நூல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை


கரூரில் இயங்கி வரும் தனியார் நூல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 12 April 2019 4:30 AM IST (Updated: 12 April 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் இயங்கி வரும் தனியார் நூல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கரூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பண பட்டுவாடாவை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் நேற்று மதியம் கரூர் வடக்கு ராமகிருஷ்ணபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களின் உற்பத்திக்காக நூல் வாங்கி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் மதுரை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த நூல் விற்பனை ரசீது உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் முறையான வகையில் வருமான வரி செலுத்தப்பட்டிருக்கிறதா? வரிஏய்ப்புக்கான முகாந்திரம் ஏதும் உள்ளதா? தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய ஏதேனும் பணம் பதுக்கப்பட்டிருப்பதற்கான சூழல் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தொடர் விசாரணையை மேற்கொண்டனர்.

வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அந்த நூல் நிறுவனத்தின் அதிபர் செல்வம், கரூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும், நிதி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், மேலும் அவர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையின் உறவினர் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் ஆணையத்துக்கு வரப்பட்ட புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர். எனினும் கணக்கில் வராமல் பணம், தங்க கட்டிகள் ஏதும் பிடிபட்டதா? முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என கேட்ட போது அதற்கு பதில் தர மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story