குடிநீர் கேட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 April 2019 11:00 PM GMT (Updated: 11 April 2019 8:02 PM GMT)

குடிநீர் கேட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக கிராமத்தில் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி அந்தப்பகுதிக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன் அந்த ஆழ்குழாய் கிணற்றுக்கான மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியவில்லை. இதனால் அந்தப்பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தம்பிரான்பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை திரண்டு வந்து குடிநீர் கேட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதினை சரிசெய்வதற்காக, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை அந்த மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதினை நீக்கவில்லை. இதனால் தற்போது நாங்கள் போதிய குடிநீர் கிடைக்காததால் காசு கொடுத்து, குடிநீர் வாங்கி குடிக்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் இதுகுறித்து வேலூர் ஊராட்சி அதிகாரிடம் பலமுறை கூறியும், அவர் மின்மோட்டார் பழுதினை நீக்க போதிய நிதி இல்லை என்று கூறப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும் அதிகாரிகள் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதினை நீக்க நடவடிக்கை எடுத்தபாடில்லை.

இதனால் தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதினை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து, முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் தம்பிரான்பட்டி கிராம மக்கள் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரனிடம் ஒரு மனுவினை கொடுத்து விட்டு சென்றனர்.

Next Story