புதுக்கோட்டையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்குறுதி


புதுக்கோட்டையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்குறுதி
x
தினத்தந்தி 12 April 2019 4:30 AM IST (Updated: 12 April 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன் என்று வாக்கு சேகரிப்பின்போது அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்குறுதி அளித்தார்.

கறம்பக்குடி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு கறம்பக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மழையூர், புதுப்பட்டி சூரக்காடு, முள்ளுங்குறிச்சி, பட்டத்திக்காடு, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் பூரண கும்ப மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். கறம்பக்குடி சீனிக்டை முக்கம் பகுதியில் சாருபாலா தொண்டைமான் பொதுமக்களிடம் ஓட்டு கேட்டு பேசுகையில், புதுக்கோட்டை மண்ணிற்கு சொந்தமான மன்னர் குடும்பத்தை சேர்ந்த எனக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஆதரவு தருகின்றனர்.

என்னை வெற்றி பெற செய்தால், பின்தங்கிய பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தையும், கறம்பக்குடி பகுதியையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே எனது முக்கிய பணி. குடிநீர் பிரச்சினையால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். காவிரி உபரிநீரை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், திருப்பி விட முயற்சி செய்வேன். சாலை கட்டமைப்பு, சுகாதார வசதி, கிராம புற மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துவேன். எனவே, உங்கள் பகுதியை சேர்ந்த எனக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கூறினார். அவருடன் அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்கள் உள்பட திரளானவர்கள் உடனிருந்தனர். 

Next Story