மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும் நாராயணசாமி ஆவேசம்


மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும் நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 12 April 2019 3:45 AM IST (Updated: 12 April 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசத்துடன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தி.மு.க. அமைப்பாளர்கள் எஸ்.பி. சிவக்குமார், சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள். காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா அனந்தராமன், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி புதுவை மக்கள் மீதும், புதுவை வளர்ச்சி மீதும் அதிக அக்கறை கொண்டவர். அவர் முதல்-அமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நமது தோளோடு தோள் நின்று நன்மைகள் செய்தவர். அவர் வழியில் மு.க.ஸ்டாலினும் நம்மோடு உள்ளார்.

கவர்னர் மாநில அரசுக்கு தொல்லை கொடுத்தபோது முதன்முதலில் நமக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி இருந்தபோதுதான் வளர்ச்சியை கண்டுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் நடக்கும் பாரதீய ஜனதா அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது. நமது அரசின் திட்டங்களை கவர்னர் தடுக்கிறார். இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை கொடுக்கக்கூட தடை ஏற்படுத்துகிறார்கள். மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

கவர்னர் தொடர்ந்து புதுவை மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார். அதற்கு பின்னால் என்.ஆர்.காங்கிரஸ் உள்ளது. இவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் 2 கதாநாயகர்களாக உள்ளது. 2 தேர்தல் அறிக்கையிலும் மாநில அந்தஸ்து இடம்பெற்றுள்ளது. இதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீட் தேர்வினை ரத்துசெய்ய குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். அதனை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ராகுல்காந்தி கொண்டுவந்துள்ளார். ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். தமிழகத்திலும் மாற்றம் வருகிறது. மக்கள் நம் பக்கம் உள்ளனர்.

புதுவை கடனை ரத்து செய்யவும், நிதி பெறவும் கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார். வரி போடாத பட்ஜெட் கொடுத்தால் மின்சார கட்டணம், குப்பை வரியை உயர்த்த கவர்னர் சொல்லுகிறார். எங்களுக்கு வாக்களித்தால் குப்பை வரியை நீக்குவோம். மற்ற வரிகளை குறைப்போம். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

மத்தியில் நடக்கும் பாசிச பாரதீய ஜனதா ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். அவர்களது போக்கினை அடக்க மு.க.ஸ்டாலின் ஆதரவு பெற்ற ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும். ராகுல்காந்தி பிரதமராக வர என்னை வெற்றிபெறச் செய்யவேண்டும். அப்படி செய்தால் புதுவையில் நல்ல ஆட்சி நடக்கும். மக்களுக்கு இலவச அரிசி தரக்கூடாது என்றவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களும் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு வைத்திலிங்கம் பேசினார்.

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் பேசும்போது, தொகுதி வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பேன் என்று குறிப்பிட்டார்.

பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தி.மு.க. தேர்தல் பணி பொறுப்பாளர் சபாபதி மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், ம.தி.மு.க. மாநில பொறுப்பாளர் கபிரியேல், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் அகமது ஜவாகீர், படைப்பாளி மக்கள் கட்சி தலைவர் தங்கம், இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் சிவக்குமார், ரத்னவேல், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் சஞ்சீவி, மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மங்கலம் பகுதியில் திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 3 ஆண்டு கால ஆட்சியின்போது பொது மக்களுக்கு இலவச அரிசியைக்கூட வழங்க முடியாமல் கவர்னர் தடுத்தார். அதனால்தான் நாங்கள் அமைதியாக போராடினோம். அந்த போராட்டத்துக்கு பிறகு சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோவும், மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோவும் இலவச அரிசி வழங்க அனுமதி கிடைத்தது.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டுமென்றால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். எனவே ராகுல்காந்தி பிரதமராக இந்த தேர்தலில் கை சின்னத்துக்கு பெருவாரியாக வாக்களித்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
1 More update

Next Story