வரி செலுத்தும் மக்களுக்கு மருத்துவம், சாலை, குடிநீர் வசதி தரமாக வழங்கப்படவில்லை சீமான் குற்றச்சாட்டு


வரி செலுத்தும் மக்களுக்கு மருத்துவம், சாலை, குடிநீர் வசதி தரமாக வழங்கப்படவில்லை சீமான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 April 2019 4:45 AM IST (Updated: 12 April 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

வரி செலுத்தும் மக்க ளுக்கு மருத்துவம், சாலை, குடிநீர் வசதி தரமாக வழங்கப்படவில்லை என கரூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சீமான் குற்றம் சாட்டினார்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கருப்பையாவை ஆதரித்து, கரூர் 80 அடி சாலையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கச்சத்தீவு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதை கொடுத்தது கொடுத்தது தான் என காங்கிரஸ், பா.ஜ.க.வினர் கூறினார்கள். இதில் இருந்தே பா.ஜ.க.வும், காங்கிரசும் வெவ்வேறானவர்கள் அல்ல என்று புரிகிறது. கரூர் காங்கிரஸ் வேட்பாளரான எனது தங்கை ஜோதிமணி சொல்வாரா? இந்த விஷயத்தில் காங்கிரசானது பா.ஜ.க.விலிருந்து வேறுபடுகிறது என்று. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், ராமர் கோவிலை கட்டமாட்டார்கள், நாங்கள் தான் கட்டுவோம் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சொல்கிறார். இதில் இருந்தே எது மதவாத கட்சி, எது மிதவாத கட்சி என்று சொல்ல முடியும்.

மருத்துவம், கல்வி, மின்சாரம், சாலை, குடிநீர் என வரி கட்டிய மக்களுக்கு அவை தரமாக கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்பது கேள்விக்குறி தான். பல அரசியல் கட்சிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் கொட்டி தேர்தலை சந்திக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்த முதலீட்டை செய்கின்றனரா? அல்லது தங்களது லாபத்துக்காக முதலீடு செய்கின்றனரா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் குடிக்க கஞ்சியை விவசாயியால் மட்டுமே கொடுக்க முடியும். கரூரில் உள்ள காவிரியில் மணல் கடத்தல் பிரச்சினை, நொய்யல் ஆற்றில் கழிவுநீர் பிரச்சினை என அதிகரித்து வருகிறது.

அரவக்குறிச்சி தேர்தலில் எப்படியும் செந்தில்பாலாஜிக்கு சீட் கொடுப்பார் மு.க. ஸ்டாலின். அவர் செய்த சாதனைக்காக இல்லாமல், அவருடைய பணபலத்திற்கு தான் சீட் கொடுப்பார் மு.க.ஸ்டாலின். அன்று படிப்பறிவில்லாத நமது முன்னோர்கள் கக்கனையும், காமராஜரையும் தேர்வு செய்தார்கள். ஆனால் தற்போது படித்த இந்த தலைமுறையினர் தலைவர்களை எப்படி தேர்வு செய்வது? என தெரியாமலிருப்பது வருத்தம் அளிக்கிறது.

எங்களை போன்றவர்களை ஆட்சியில் அமர்த்தி இருந்தால் நீட் தேர்வை, தமிழகத்திற்கு வெளியே கொண்டு விட்டிருப்போம். நாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக வரவில்லை. அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றத்திற்காக வந்திருக்கிறோம். தேர்தல் பறக்கும் படை பறிக்கும் படைபோல் செயல்படுகிறது. மளிகை வியாபாரி உள்ளிட்ட சாதாரண வியாபாரிகளிடம் மட்டுமே பறிக்கிறது. தெருவுக்கு தெரு கோடி கோடியாக பணம் கொடுப்பவர்களை விட்டு விடுகிறது. வாக்குப்பதிவு எந்திரத்தில் எங்களது சின்னத்தை மட்டும் மங்கலாக வைத்திருக்கிறார்கள். எனவே எது தெரியலையோ. அது தான் எங்களது சின்னம். அதனை அழுத்துங்கள் என கேட்க வேண்டியதாகி விட்டது. என்னதான் மறைத்தாலும் விவசாயி வெல்வான். வாழ்வான்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story