கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு


கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2019 11:00 PM GMT (Updated: 11 April 2019 8:31 PM GMT)

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகன் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரசாந்த் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட் டறிந்தனர்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி 1,031 வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியக்கூடிய வகையில் வி.வி.பேட் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

கரூர் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு, கரூர் தொகுதியின் 42 வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது சூறாவளியாக சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற் கிடையே கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு மே மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், கரூர் மாவட்ட அரசியல் கட்சியினர் அந்த தொகுதியின் வெற்றியையும் கருத்தில் கொண்டு தீவிர களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் மே மாதம் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையொட்டி, கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேர்தலுக்கு பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கு பாதுகாப்புடன் வைப்பதற்கு ஏதுவாக, இரும்பு தகடுகளை கொண்டு வெட்டவெளியாக உள்ள ஜன்னல்களை மறைப்பது என பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று கரூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன், தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டமன்றத்தொகுதிவாரியாக வாக்கு எண்ணும் மையத்தில் முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளங் களில் வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறைகள் குறித்தும், வாக்குப்பதிவு முடிந்தபிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக அறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அதிகாரிகள் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் கொண்டுவரப்படும் மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான இடம் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வரும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்கள் எந்த வழியே வந்து, எந்த வழியே செல்ல வேண்டும் என்பது குறித்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது கரூர் சட்டமன்றத்தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சரவணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிற்றரசு, துரைராஜ், பொதுப் பணித்துறை செயற்பொறி யாளர் இலால்அகமது, நில அளவைப்பிரிவு அதிகாரி புவணேஸ்வரன், வட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். 

Next Story