“இந்தியாவின் சிறந்த காவலாளி மோடிதான்” சரத்குமார் பிரசாரம்


“இந்தியாவின் சிறந்த காவலாளி மோடிதான்” சரத்குமார் பிரசாரம்
x
தினத்தந்தி 11 April 2019 10:15 PM GMT (Updated: 11 April 2019 9:01 PM GMT)

சிறுபான்மை மக்களின் உண்மையான காவல்காரர் மோடி என்று சரத்குமார் கூறினார்.

மானாமதுரை,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு அவர் பேசியதாவது:-

மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அதே போல தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு நிறைவேற தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும். எனவே 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். அண்டை நாடுகளின் அச்சுறுத்தலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கக்கூடிய, நாட்டை பாதுகாக்கக் கூடிய, தொலைநோக்கு சிந்தனை உடைய மோடி பிரதமரானால் தான் மத்தியில் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும்.

தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதனால் தான் இன்று வரை மீனவர்களுக்கு பிரச்சனை உள்ளது. அதே போல காவிரி பிரச்சினைக்கு கர்நாடகத்திலும், மத்தியிலும் இருந்த காங்கிரஸ் தான் காரணம். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் இவர்கள் தான் காரணம். ஆனால் இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி வீடுகளை கட்டி கொடுத்தார். பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சி காரணமாக வெளிநாடுகளில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்திய வீரர்களை தாக்கிய பாகிஸ்தானுக்கு உடனே பதிலடி கொடுத்த மோடிதான் இந்தியாவின் சிறந்த காவலாளி.

மத்தியில் வலுவான, நிலையான பெரும்பான்மை ஆட்சி அமைக்க பா.ஜ.க.வால் மட்டுமே முடியும்.

இவ்வாறு பேசினார்.

முன்னதாக ராமநாதபுரம் வந்த அவரை அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வரவேற்றனர். இதே போல் பரமக்குடியிலும் சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா, மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நெட்டூர் நாகராஜனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மானாமதுரை தேவர் சிலை அருகே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான். மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள், ஸ்கூல்பேக், நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக வழங்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா. பெண்களுக்கான தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதியுதவி திட்டம் உள்ளிட்டவற்றை வழங்கியவர் ஜெயலலிதா. அவரது வழியில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சி நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெறவும், திட்டங்களை நிறைவேற்றவும் நிதி தேவை. அதற்கு தமிழகத்திலும் மத்தியிலும் நிலையான ஆட்சி தேவை. தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story