“தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் பணிகளை துரிதமாக முடிப்பேன்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பிரசாரம்
“தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் பணிகளை துரிதமாக முடிக்க பாடுபடுவேன்” என அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பிரசாரம் செய்தார்.
நாங்குநேரி,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் நேற்று நாங்குநேரி ஒன்றிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். புதுக்குறிச்சியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் மருதகுளம், மூன்றடைப்பு, மறுகால்குறிச்சி, நாங்குநேரி, பெரும்பத்து, மஞ்சன்குளம், சிறுவளஞ்சி, தளபதி சமுத்திரம், நல்லான்குளம், இளையநயினார்குளம், வாகைகுளம், பட்டார்புரம், ஏமன்குளம், பரப்பாடி, செண்பகராமநல்லூர், உன்னங்குளம், அம்பலம், மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி, வடக்கு விஜயநாராயணம், இட்டமொழி ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.
நாங்குநேரியில் வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-
நாங்குநேரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டிக் கொடுப்பேன். நாங்குநேரியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லவும், புதிய தொழிற்சாலைகளை அமைக்கவும் ஏற்பாடு செய்வேன். பள்ளி, கல்லூரி கட்டிடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்குவேன். அரசு கல்லூரி அல்லது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி கொண்டு வருவேன். இந்த தொகுதியில் அனைத்து அடிப்படை திட்டங்களையும் கொண்டு வர பாடுபடுவேன். வருகின்ற தேர்தலில் என்னை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்தால் தற்போது நடந்து வரும் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் பணிகளை துரிதமாக முடிக்க பாடுபடுவேன். குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பேன். பரப்பாடியில் புதிய பஸ்நிலையம் கட்டித்தருவேன். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நாங்குநேரி பகுதிகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசார நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கராஜ், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய அவை தலைவர் தளவை சுந்தர்ராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெயபாலன், ரெட்டியார்பட்டி நாராயணன், சிந்தாமணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமசுப்பு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சூரியகுமார், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கணேசன், பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய தலைவர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் பாலாஜி, அ.தி.மு.க. விவசாய அணி மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் உடன் சென்றனர்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் நெல்லை சந்திப்பு, ரெயில் நிலையம், மதுரை ரோடு, சிந்துபூந்துறை, செல்வி அம்மன் கோவில் தெரு, பாலபாக்கியாநகர், உடையார்பட்டி உள்ளிட்ட பகுதி மக்களிடம் அக்கட்சியினர் வாக்கு சேகரித்தனர். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சிந்தா சுப்பிரமணியம், சிறுபான்மை பிரிவு தலைவர் ரமேஷ் செல்வன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகனா ராஜா, வக்கீல் கிருஷ்ணகுமார், மகளிரணி ஜெரினா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story