மாவட்ட செய்திகள்

பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் ரங்கசாமி உறுதி + "||" + Bharatiya Janata Party The rule is set again Rangaswamy confirmed

பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் ரங்கசாமி உறுதி

பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் ரங்கசாமி உறுதி
மத்தியில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.


அதன்படி புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமிக்கு ஆதரவாக ரங்கசாமி திறந்த ஜீப்பில் நின்றபடி வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வேட்பாளர் நாராயணசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

புதுவை ரோடியர் மில் அருகே பிரசாரத்தின்போது ரங்கசாமி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியினர் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்களையும் கொண்டு வரப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார். எதிர்க்கட்சி தடையாக உள்ளது என கூறுகிறார்கள்.

நாங்கள் யாரை சந்தித்தோம், எந்த திட்டத்தை தடுத்தோம். வீணாக மற்றவர்கள் மீது பழிசுமத்தாதீர்கள். உங்களால் எதையும் செய்ய முடியவில்லை என்றால் விட்டு விலகி செல்லுங்கள். ஆட்சியாளர்களால் மாநில வளர்ச்சி மட்டுமின்றி மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாங்கள் அரசியலில் அனுபவம் இல்லாத இளைஞரை வேட்பாளராக நிறுத்தி உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை நாங்கள் நம்புகிறோம். எனவே தான் படித்த இளைஞரை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். நாங்கள் கட்சியில் உழைக்காதவர்களுக்கு சீட்டு வழங்கியதாக கூறுகிறார்கள். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கும்போது நமது வேட்பாளரின் தந்தை கேசவன் உறுதுணையாக இருந்தார். இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. பொய்யான பிரசாரத்தை காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எனவே நம்முடைய வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பலகீனமாக ஆட்சியை நடத்தி வருகிறார். இலவச அரிசி, மாநில அந்தஸ்து விவகாரம், நீட் தேர்வுக்கு விலக்கு, மூடப்பட்ட பஞ்சாலை எப்பொழுது திறப்பது, கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது உள்ளிட்டவை குறித்து கேள்வி கேட்டால், ராகுல் காந்தி பிரதமரானால் செய்வதாக கூறுகிறார்கள். தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராகாவிட்டால் முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்வாரா?. அவர் தினமும் மக்களை பொய் கூறி ஏமாற்றி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார். ஆனால் புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் கம்யூனிஸ்டு கட்சியினருடன் கூட்டணி வைத்துக்கொண்டு போட்டியிடுகிறார்கள். காங்கிரசார் அமைத்துள்ள கூட்டணி தான் கொள்கையற்ற கூட்டணி.

புதுவை அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. வாராத குப்பைக்கு வரி, வராத தண்ணீருக்கு வரி, வீடு-சொத்து வரி, மின்சார கட்டணம் என அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த 3 மாதத்தில் ரங்கசாமி தலைமையில் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி புதுவையில் மலரும். மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில் நமது வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.