ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 April 2019 11:00 PM GMT (Updated: 11 April 2019 9:44 PM GMT)

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் உள்பட 7 பேர் நேற்று மதியம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் போலீசார் அவர்கள் மீது தண்ணீரையும் ஊற்றினார்கள்.

அதைத்தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் அவர்கள் 7 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பவானி அருகே உள்ள மயிலம்பாடி கன்னாங்கரட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 58), அவரது தம்பி அர்ஜுனன் (55), அக்காள் சம்பூர்ணம் (66), சிவராஜின் மனைவி வள்ளியம்மாள், அவருடைய மகள் உமாதேவி, அர்ஜுனனின் மனைவி நீலம்மாள், மகள் சுகன்யா ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் மற்றும் 4½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் தென்னை மரம் வைத்து பராமரித்து வந்தோம். மேலும் புறம்போக்கு நிலத்தில் நாங்கள் ஆழ்குழாய் கிணறும் அமைத்துள்ளோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பராமரிப்பில் இருந்து வந்த 4½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. அப்போது விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் மற்றும் அமைச்சரிடம் நாங்கள், ‘சம்பந்தப்பட்ட 4½ ஏக்கர் நிலத்தில் உள்ள தென்னை மரத்திற்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும், மேலும் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் முறையிட்டோம்.

அதற்கு அதிகாரிகள், ‘தென்னை மரத்துக்கு இழப்பீடு தர முடியாது, ஆழ்குழாய் கிணறு அமைத்து கொடுப்பதுடன், 2 வீடுகள் ஒதுக்கி தருகிறோம்’ என்று கூறினார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை ஒருவர் எங்களிடம் வந்து, அதிகாரிகள் கூறியதுபோல் ஆழ்குழாய் கிணறு அமைத்து தரமாட்டார்கள். மேலும் வீடுகளும் ஒதுக்கமாட்டார்கள் என்று கூறினார். இதனால் மனம் உடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றோம்’ என்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் தீக்குளிக்க முயன்ற 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story