ஆபாச படம் எடுத்து மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் மீது மனைவியின் தங்கை பாலியல் புகார் ஈரோட்டில் பரபரப்பு
ஆபாச படம் எடுத்து மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் மீது அவரது மனைவியின் தங்கை பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த 49 வயது பெண், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
எனக்கு 17 வயதில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 7-வது மாதம் எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்தேன். அந்த நேரம் எனது அக்காவின் கணவர் தங்கராசு என்பவர் வீட்டோடு மாப்பிள்ளையாக எங்கள் வீட்டிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் என் மீது அக்கறை காட்டுவதுபோல இருந்தார். என் கணவர் இறந்ததும், நான் கர்ப்பிணி என்றுகூட பார்க்காமல் என்னை மிரட்டி பாலியல் உறவு வைத்துக்கொள்வார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான என்னை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது, எனக்கு தெரியாமலேயே குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார். அது எனக்கு பின்னர்தான் தெரிந்தது. எனக்கு பிறந்த குழந்தைக்கு சரியான கவனிப்பு இல்லாமல் 5 மாதத்திலேயே இறந்து விட்டது. அதற்கு பின்னர் எனக்கு வேறு திருமணம் செய்ய முடியாதபடி எனக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டீர்களே என்று கேட்டபோது, உன்னை நான்தான் திருமணம் செய்யப்போகிறேன். உன் கணவன் என்ற முறையில் குடும்பக்கட்டுப்பாடு செய்ய நான்தான் டாக்டர்களிடம் கூறினேன் என்றார்.
பின்னர் நான் வேறு வழியின்றி அவர் மிரட்டலுக்கு பணிந்து வந்தேன். பலமுறை என்னை மிரட்டியே என்னுடன் தகாத உறவு வைத்துக்கொண்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு என்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்தார். அதை கொண்டு வந்து என்னிடமே காட்டினார். இதை ஏன் எடுத்தீர்கள் என்று நான் கேட்டபோது, உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியது இருக்கிறது என்று கூறினார். அது என்ன என்று தெரியாமல் இருந்தேன். அப்போது எனது தந்தை எனக்காக முள்ளாம்பரப்பு பகுதியில் 1,500 சதுரஅடியில் ஒரு தார்சு வீடும், பெரியவலசு வாய்க்கால் மேட்டில் எனக்கு பாத்தியப்பட்ட ஓட்டு வீட்டினையும் கொடுத்தார். எனது தந்தை இறந்ததும், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கராசு என்னிடம் வந்து தான் ஏற்கனவே எடுத்த புகைப்படத்தை காட்டினார். இதை எதற்காக காட்டுகிறீர்கள் என்று கேட்டதும், இதை இணையதளத்தில் வெளியிட இருக்கிறேன் என்று கூறி மிரட்டினார். நான் பயந்து நடுங்கினேன். அப்போது இதை வெளியிடக்கூடாது என்றால், முள்ளாம்பரப்பு வீட்டை அவருடைய மனைவி பெயரில் எழுதிக்கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். எனக்கு வேறு வழி தெரியாததால் அந்த வீட்டை எழுதிக்கொடுத்து விட்டேன். பின்னர் பெரியவலசு வாய்க்கால்மேடு பகுதி வீட்டை அவரது மகன் பெயரில் உயில் எழுதி வைக்கும்படி கூறினார். அதையும் செய்தேன்.
இந்த நிலையில் நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். இதனால் தங்கராசு என்மீது கோபமாக இருந்தார். எனவே நான் என்னிடம் இருந்து ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்துகளை திரும்ப கேட்டேன். அதற்கு அவர் எனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சிலர் என்னையும், எனது கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். எனது அக்காவின் கணவர் தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் வார்டு பொறுப்பாளராக இருக்கிறார். ஆளும் கட்சியின் பிரமுகராக இருப்பதால், கட்சியின் பெரிய தலைவர்களின் பெயர்களை கூறி என்னை மிரட்டி வருகிறார். எனவே என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கி கொலை மிரட்டல் விடுத்த தங்கராசு மீது நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது கணவருக்கும் பாதுகாப்பு அளிக்கவும், எனது சொத்துகளை மீட்டுத்தரவும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அந்த பெண் கூறி இருந்தார்.
இதற்கிடையே அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. பிரமுகர் மீது அவரது மனைவியின் தங்கையே பாலியல் புகார் கொடுத்து இருப்பது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story