தேவகோட்டை அருகே, புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


தேவகோட்டை அருகே, புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 11 April 2019 10:30 PM GMT (Updated: 11 April 2019 10:55 PM GMT)

தேவகோட்டை அருகே கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே நல்லாங்குடி கிராமத்தில் உள்ள வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நல்லாங்குடி-ஓரியூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 88 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவுகளாக நடைபெற்றன. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும், 2-வது பரிசை சின்ன மாங்குளம் அழகு வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை விராமதி தையல்நாயகி கருப்பையா வண்டியும், 2-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 3-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 25 வண்டிகள் கலந்து கொண்டு 2 பிரிவுகளாக நடைபெற்றன.

முதல் பிரிவில் முதல் பரிசை சொக்கலிங்கம் புதூர் சக்தி வண்டியும், 2-வது பரிசை குண்டேந்தல்பட்டி சுப்பு வண்டியும், 3-வது பரிசை நல்லாங்குடி சசிகுமார் வண்டியும் பெற்றன. 2-வது பிரிவில் முதல் பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் வண்டியும், 2-வது பரிசை அறந்தாங்கி கரிமூட்டம் வண்டியும், 3-வது பரிசை நெய்வாசல் பெரியசாமி வண்டியும் பெற்றன.

இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 29 வண்டிகள் கலந்துகொண்டு 2 பிரிவுகளாக நடைபெற்றது.

முதல் பிரிவில் முதல் பரிசை அமராவதி புதூர் வேலு கிருஷ்ணன் வண்டியும், 2-வது பரிசை அடம்பூர் தங்கராஜா வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி வண்டியும் பெற்றன. 2-வது பிரிவில் முதல் பரிசை மருங்கூர் முகமது வண்டியும், 2-வது பரிசை மட்டங்கிபட்டி காவியா வண்டியும், 3-வது பரிசை தேவகோட்டை சரவணன் வண்டியும் பெற்றன.

வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story