வாக்குப்பதிவு மையங்களுக்குள் யாரும் செல்போன் கொண்டு செல்லக்கூடாது - தேர்தல் அதிகாரி வீரராகவராவ் பேட்டி

வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ் கூறியுள்ளார்.
பரமக்குடி,
பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இதனை பார்வையிடுவதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் பரமக்குடி வந்தார். அப்போது வாக்குப்பதிவு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலுக்குரிய அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னம் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு 4,577 வாக்குப்பதிவு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் எந்திரம் 2,798-ம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அதை சரி செய்யவும் கூடுதலாக 10 சதவீத எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
இதுவரை தேர்தல் புகார்கள் தொடர்பாக 4,500 அழைப்புகள் வந்துள்ளன. 46 தேர்தல் புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 18,419 கட்சி கொடி கம்பங்கள், தோரணங்கள், போர்டுகள், பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட கணக்கில் வராத ரூ.3 கோடியே 50 லட்சத்து 99 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 18-ந்தேதி அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளை 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும். எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும். இதை வலியுறுத்தி 100 பேருடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடத்தப்பட உள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீறி கள்ள ஓட்டு போடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் வாக்குச்சீட்டு, ஆதார் கார்டு, அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.
வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் அதிகாரிகளும், வேட்பாளர்களின் ஏஜெண்டுகளும், வாக்காளர்களும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. யாருக்கு வாக்களித்தோம் என்பதை செல்போன் மூலமும், வீடியோ மூலமும் பதிவு செய்தால் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு அந்த குற்றத்தை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப், பரமக்குடி தொகுதி தேர்தல் அதிகாரி ராமன், தாசில்தார் சரவணன், தேர்தல் தொடர்பு அலுவலர் செய்யது முகமது ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story






