நெய்வேலியில், என்.எல்.சி. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


நெய்வேலியில், என்.எல்.சி. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 April 2019 3:30 AM IST (Updated: 12 April 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெய்வேலி,

நெய்வேலி வட்டம் 12 என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 53). என்.எல்.சி. 2-ம் அனல்மின் நிலையத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன், சொந்த ஊரான காட்டுமன்னார்கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து அய்யப்பன் மட்டும் கடந்த 9-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தார். இந்த நிலையில் அய்யப்பனின் மனைவி செல்வி, தனது கணவரை செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து செல்வி, தனது மகன் மனோஜூடன் நெய்வேலியில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் அய்யப்பன், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யப்பனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story