ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காததால், பெண் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்துக்குள் சிறை வைத்த பொதுமக்கள்


ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காததால், பெண் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்துக்குள் சிறை வைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 April 2019 3:45 AM IST (Updated: 12 April 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காததால் பெண் கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகத்துக்குள் வைத்து பூட்டி பொதுமக்கள் சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் ஒருவர் கட்டிடம் கட்டி வந்ததாக தெரிகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், கட்டிட பணியை தடுத்து நிறுத்தக்கோரியும், அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அந்த கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்துக்கு திரண்டு சென்றனர். தொடர்ந்து அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியிடம், ஆக்கிரமிப்பு கட்டிடம் குறித்து முறையிட்டனர். ஆனால் அதற்கு அவர், உரிய பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியை அலுவலத்துக்கு உள்ளேயே சிறைவைத்து கதவை பூட்டினர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிராம நிர்வாக அலுவலரை சிறைபிடித்து பூட்டி வைத்துள்ளது தவறு என எச்சரிக்கை விடுத்தனர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அலுவலகத்தின் சாவியை பறித்து அலுவலகத்தை திறந்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியை விடுவித்தனர். மேலும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து போராட்டம் நடத்திய 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story