அ.தி.மு.க.வின் வியாபார கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு


அ.தி.மு.க.வின் வியாபார கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 11 April 2019 11:40 PM GMT (Updated: 11 April 2019 11:40 PM GMT)

அ.தி.மு.க.வின் வியாபார கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தேனியில் நடந்த பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இடைத்தேர்தல் நடக்கும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மகாராஜன் ஆகியோருக்கு வாக்குசேகரித்து தேனி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். தேனி அல்லிநகரம், குன்னூர், கண்டமனூர், கன்னியப்பபிள்ளைப்பட்டி, ஆண்டிப்பட்டி, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி, பெரியகுளம் ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செய்தார்.

தேனி அல்லிநகரம் பஸ் நிறுத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:-

மோடி கடந்த 5 ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலின்போது வாக்கு கொடுத்தார். வெளிநாட்டில் இருக்கிற கருப்பு பணத்தை எல்லாம் எடுத்து வந்து, உங்கள் எல்லோருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறினார். 10 காசாவது போட்டாரா? ஒன்றே ஒன்று தான் போட்டார். எல்லோருக்கும் நாமத்தை போட்டார். இப்போது, ஏப்ரல் 18-ல் நமக்கு அதே வாய்ப்பு கிடைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் அதே நாமத்தை மோடிக்கு போட வேண்டும்.

தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க 13 பேரை பட்டப் பகலில் சுட்டுக் கொன்றார்கள். அதற்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட தெரிவிக்காத இரக்கமற்ற பிரதமர். மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க நினைக்கிறோம்.

மே 19-ந்தேதி மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று விட்டோம் என்றால், ஜூன் 3-ந்தேதி தலைவர் கருணாநிதி பிறந்த நாளில், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடுவார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண அட்டை வழங்கப்படும். கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்படும். 100 நாள் வேலை வழங்கும் திட்டம் 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதேபோல், ராகுல்காந்தி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் 5 கோடி குடும்பங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம், ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதை சொன்னவுடன் மோடிக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. இதை கொடுக்க முடியாது என்று சொல்கிறார். நான் சொல்கிறேன், கண்டிப்பாக கொடுப்பார். ஏன் தெரியுமா? சொன்னது மோடி கிடையாது. சொன்னது ராகுல்காந்தி.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி சம்பவமே இதற்கு உதாரணம். பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் 2 ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து தூக்கி வீசிவிட்டார். அந்த பெண் விபத்தில் இறந்து விட்டதாக மூடி மறைத்து விட்டார்கள். இப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து நிறைய பெண்கள் புகார் செய்துள்ளனர். 200 பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

மக்கள் ஓட்டுப்போட்டு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனாரா?. முதலில் அவருக்கு யாராவது ஓட்டு போடுவார்களா?. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது 2 முறை ஓ.பன்னீர்செல்வத்தை தான் முதல்-அமைச்சராக்கினார். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று யாருக்காவது தெரியுமா? ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். ஒன்றிய செயலாளராக இருந்தவரை முதல்-அமைச்சராக்கினார். சசிகலாவுக்கு கூட அந்த வாய்ப்பை ஜெயலலிதா வழங்கவில்லை. அந்த அம்மாவுக்காவது அவர் உண்மையாக இருந்தாரா?.

ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி அன்புமணி ராமதாஸ் எப்படி எல்லாம் பேசினார். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு இப்படி ஒரு கேடுகெட்ட கூட்டணியை அமைத்துள்ளார்கள். கேட்டால், மகா கூட்டணியாம். அது மானங்கெட்ட கூட்டணி. இந்த கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஜெயலலிதா வழியில் நடக் கும் ஆட்சி என்கிறார்கள். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்றாவது சொன்னார்களா? ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்தவுடன் இதுகுறித்து அவர் வாய் திறக்கவே இல்லை. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க யாரையும் விடவில்லை. அவருடைய சொந்தக்காரர்களையும் பார்க்கவிடவில்லை.

சொந்த கட்சி தலைவர், ஒரு முதல்-அமைச்சருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு அரசு எப்படி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்?

விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு தேர்தல் நடக்கிறதே தெரியாது. அவருடைய மனைவி பிரேமலதா பேசும் போது, எத்தனை பாலியல் வன்கொடுமை நடந்தாலும் பரவாயில்லை, அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறார். இதை எல்லாம், விஜயகாந்த் கேட்டால் வீட்டுக்குள் சேர்ப்பாரா?. அந்த கூட்டணி கேடுகெட்ட கூட்டணி. வியாபார கூட்டணி. அந்த கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்தலில் ஆதிக்க சக்திகளும் வேண்டாம். இந்த அடிமைகளும் வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story