மராட்டியத்தில் முதல்கட்ட தேர்தல் பதற்றத்துடன் முடிந்தது : போலீசாருடன் நக்சலைட்டுகள் துப்பாக்கி சண்டை


மராட்டியத்தில் முதல்கட்ட தேர்தல் பதற்றத்துடன் முடிந்தது : போலீசாருடன் நக்சலைட்டுகள் துப்பாக்கி சண்டை
x
தினத்தந்தி 12 April 2019 5:21 AM IST (Updated: 12 April 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் முதல் கட்டமாக நடந்த 7 நாடாளுமன்ற தொகுதிகளில் 56 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவின் போது 2 இடங்களில் குண்டு வெடித்தது. தேர்தல் பணி முடிந்து சென்ற போலீசாருடன் நக்சலைட்டுகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

முதல் கட்டமாக நாக்பூர், வார்தா, ராம்டெக், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

இதில் நாக்பூரில் மத்திய மந்திரி நிதின் கட்காரி(பா.ஜனதா), நானா படோலே (காங்கிரஸ்), சந்திராப்பூரில் மத்திய இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் (பா.ஜனதா), யவத்மால்-வாசிமில் மாணிக்ராவ் தாக்கரே (காங்கிரஸ்), பாவனா காவ்லி (சிவசேனா) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். மொத்தம் 116 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர்.

இந்த தேர்தலில் 1 கோடியே 30 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி-சிமூரில் மட்டும் பிற்பகல் 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. மொத்தம் 55.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இதில் அதிகப்பட்சமாக நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி-சிமூர் தொகுதியில் 61.33 சதவீத வாக்குகள் பதிவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறைந்தப்பட்சமாக ராம்டெக்கில் 51.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

நேற்று முன்தினம் மாலை இந்த தொகுதியில் உள்ள கட்சிரோலி மாவட்டம் எடபள்ளி தாலுகா கட்டா ஜாம்பியா என்ற கிராமத்தில் வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஊழியர்கள் கொண்டு சென்றபோது, நக்சலைட்டுகள் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் ரிசர்வ் படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனால் கட்சிரோலி-சிமூர் தொகுதியில் நேற்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது.

ஆனாலும் இந்த தொகுதியில் வாக்குப்பதிவின் போதும் நக்சலைட்டுகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். வாகேசரி என்ற பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி கொண்டு இருந்தனர். அப்போது காலை 10.30 மணி அளவில் அந்த வாக்குச்சாவடி அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. வாக்குச்சாவடியில் இருந்து 150 மீட்டர் தொலைவிலேயே குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதேபோல மற்றொரு இடத்திலும் நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் தேர்தல் பணி முடிந்து ஊழியர்கள் திரும்பி கொண்டு இருந்தனர். பாதுகாப்புக்காக போலீசாரும் உடன் சென்றனர். தும்திகாசா அருகே சென்றபோது அவர்களை நோக்கி மறைந்து இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்து கொண்ட போலீசார் நக்சலைட்டுகளுக்கு துப்பாக்கியால் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் பயங்கர சண்டை நடந்தது. பின்னர் நக்சலைட்டுகள் பின்வாங்கி தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவங்களால் மராட்டியத்தில் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் பதற்றத்துடன் முடிந்தது. 

Next Story