சின்ன வயது சேட்டை


சின்ன வயது சேட்டை
x
தினத்தந்தி 12 April 2019 2:37 PM IST (Updated: 12 April 2019 2:37 PM IST)
t-max-icont-min-icon

நகரத்தில் அவனுக்கு வசிப்பது பிடிக்கவில்லை

கட்டிட காண்டிராக்டர் மகன் வால்டர் எலியாஸ். நகரத்தில் அவனுக்கு வசிப்பது பிடிக்கவில்லை. அமெரிக்காவின் மசவுரி அருகே தங்களுக்கு இருந்த ஒரு பண்ணைவீட்டில் வசிக்கத் தொடங்கினான். அருகில் காட்டுப்பகுதி உண்டு.

ஒருநாள் பகல் பொழுதில் நடந்துபோன வால்டர் ஒரு ஆந்தையைப் பார்த்தான். அது மரக்கிளையில் தூங்கிக்கொண்டிருந்தது. வீட்டில் இதை வளர்த்தால் என்ன? என்று ஆந்தையின் கால்களை கெட்டியாகப் பிடித்தான்.

தூக்கத்தில் இருந்து விழித்த ஆந்தை எவ்வளவோ திமிறிப் பார்த்தது, ஆனால் தப்பிக்க முடியவில்லை. உடனே காட்டுக்கூச்சல் போட்டு கத்தியது. அதன் கத்தலும், திமிறலும் சிறுவனுக்கு கோபத்தை வரவழைத்தது. அதை தரையில் தூக்கிவீசினான். கோபத்தில் எட்டி உதைத்தான். ஆந்தை செத்துவிட்டது. அதன் ரத்தத்தைப் பார்த்ததும் அவன் பயந்துவிட்டான்.

யாரும் பார்க்காத அந்த சம்பவத்தை மறைத்துவிடும் நோக்கத்துடன், இறந்த ஆந்தையை குழிதோண்டி புதைத்தான். அத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்திருந்த அவனது கனவில் அந்த ஆந்தை வந்துவிட்டது. மீண்டும் பயந்துபோன அவன் தனக்குத்தானே ஒரு உறுதிமொழி எடுத்தான். “இனி எந்த உயிரினத்தையும் கொல்லமாட்டேன்” என்பதுதான் அந்த உறுதிமொழி.

இப்படி சின்னவயது சேட்டையுடன் வளர்ந்த அந்த சிறுவன்தான் பின்னாளில் ஏராளமான உயிரினங்களை காற்றிலே சுதந்திரமாக உலவவிட்டான். எல்லோரது மனதிலும் தவழவிட்டான். ஆம், அந்த சிறுவன்தான் டிஸ்னி லேண்ட் நாயகன் வால்ட் டிஸ்னி. மிக்கிமவுஸ், டொனால்டு டக் உள்ளிட்ட ஏராளமான சித்திர உயிரினங்களுக்கு உயிரூட்டியவர்.

கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பற்றிய மலரும் நினைவுகளை அசைபோட்டபோதுதான், தனது சின்னவயதில் நடந்த மேலே உள்ள நிகழ்வை ஒருமுறை அவர் வெளியிட்டார்.

பிரபுமாறச்சன், சரவணந்தேரி.


Next Story