காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு குறித்து மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் சேலம் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு


காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு குறித்து மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் சேலம் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 13 April 2019 4:45 AM IST (Updated: 12 April 2019 7:37 PM IST)
t-max-icont-min-icon

‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்’ என்று சேலம் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.

சேலம், 

சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள மைதானத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

இந்த தேர்தல் என்பது 2 கொள்கை எதிரிகளுக்கு இடையிலான போட்டியாக அமைந்துள்ளது. காங்கிரஸ் இயக்கமும், தி.மு.க.வும் பல்வேறு பார்வைகள், கலாசாரங்கள் இருக்கின்றன என்று கூறுகின்றனர். நாங்கள் அனைத்து சிந்தனைகளும், கலாசாரமும் ஒருங்கிணைந்து இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் தமிழ்நாடு, நாக்பூரில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மேலும் பிரதமரின் அலுவலகம் தான், தமிழக மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆளவேண்டும் என்று கூறுகிறோம். தமிழர்கள், தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டை மதிப்பது தான் ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்க முடிவும் என்று நம்புகிறோம். அதனால் தான் இந்த கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம்.

தலைவர் கருணாநிதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை மு.க.ஸ்டாலின் இங்கு குறிப்பிட்டார். இதை நான் ஒரு மகனின் உணர்வாக பார்க்கிறேன். தன்னுடைய தந்தைக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற வேதனை அவர் பேச்சு மூலம் அறிந்தேன். நான் மு.க.ஸ்டாலினுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் அவர்கள் உங்கள் தந்தையை மட்டும் அவமானப்படுத்தவில்லை.

உங்கள் தந்தை ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலிக்க செய்தவராக இருந்தார். கருணாநிதியை அவமானப்படுத்தியது, தமிழர்களையே அவமதித்ததாக நான் கருதுகிறேன். இது யாராக இருந்தாலும், அவர் எந்த கட்சியில் இருந்தாலும் இது தமக்கு ஏற்பட்ட அநீதி என்று ஒவ்வொரு தமிழனும் உணர்வார்கள்.

எங்கள் தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் உருவாக்கப்பட்டது அல்ல. இது வெளிபடையானதாகவும், லட்சக்கணக்கான மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய அறிக்கையாகவும் அமைந்துள்ளன. ஒரு உதாரணம் மட்டும் இங்கு கூறுகிறேன். தேர்தல் அறிக்கை பணி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், தமிழர்களின் கருத்துக்களின் படி ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு சொன்னார்கள்.

அதாவது, அனிதா என்ற பெண்ணை பற்றி குறிப்பிடும் போது, அவர் ‘நீட்‘ தேர்வின் காரணமாக தற்கொலைக்கு தள்ளப்பட்டு உயிர் துறந்தார் என்று சொன்னார்கள். இது தமிழ் மக்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. எங்களுடைய தேர்தல் அறிக்கையில் ஒரு வரி இருக்கிறது.

அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால் ‘நீட்‘ தேர்வு என்பது தேவையா?, தேவை இல்லையா? என்பதை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளோம். தமிழகத்தில் இதுபோன்று இன்னொரு அனிதா உருவாக வேண்டாம் என்று நினைக்கிறோம். இந்த தேர்வின் காரணமாக இளம் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை விரும்பவில்லை. நாங்கள் இப்போது தமிழக அரசுக்கே இந்த ‘நீட்’ தேர்வு குறித்து முடிவு எடுப்பதை விட்டுவிட்டோம்.

நாங்கள் கருத்து பரிமாற்றத்தின் மூலம் தீர்வுகளை எட்ட முடியும் என்று விரும்புகிறோம். ஆனால் மோடியோ அல்லது பா.ஜனதாவினரோ கருத்து பரிமாற்றம் மீது நம்பிக்கை வைக்காதவர்களாக இருக்கிறார்கள். ஒருநாள் இரவு 8 மணிக்கு இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும் என்று மோடி முடிவு எடுக்கிறார். அவர் உடனடியாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தேவையா? என்று அவர் யாரிடமாவது கேட்டாரா?. இதுகுறித்து அவர் 12 வயது குழந்தையிடம் கேட்டிருந்தால் கூட அந்த குழந்தை தெரிவித்திருக்கும். அதாவது, அந்த குழந்தை பிரதமரை பார்த்து, நீங்கள் தயவு செய்து பண மதிப்பிழப்பு செய்யாதீர்கள். இது அழிவுக்கு வழிவகுக்கும் என்று கூறி இருக்கும். ஆனால் அவர் யாரையும் கேட்கவில்லை. கேட்கவும் மாட்டார். அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை அதானிக்கும், அம்பானிக்கும் கொடுப்பதிலே தான் விருப்பம் அதிகம்.

டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தும் போது அவர்களுக்காக ஆறுதல் கூற பிரதமருக்கு மனம் இல்லை. அவர்கள் தங்கள் ஆடைகளை எல்லாம் களைந்து வீதியில் சென்றபோது கூட அழைத்து பேச எண்ணவில்லை. மேலும் அவர்களை அழைத்து ஏன் போராடுகிறீர்கள்? என்று கூட கேட்கவில்லை. அனில் அம்பானியை கட்டித்தழுவுகிற காட்சியை பார்த்திருப்பீர்கள்.

நிரவ் மோடி மற்றும் விஜய்மல்லையா ஆகியோர் அருகில் மோடி அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர் ஒரு ஏழை அல்லது விவசாயியுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்திருக்க முடியாது. அவர் கப்பர்சிங்(ஜி.எஸ்.டி.) என்கிற கொள்ளைக்கார வரியை விதித்தார். இந்த வரியை அகற்ற வேண்டும் என்றால் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஒரே வரி, குறைந்தப்பட்ச வரி, எளிமையான வரி விதிக்கப்படும். நாங்கள் மேலும் பல்வேறு நன்மைகளை செய்ய திட்டங்களை வகுத்துள்ளோம்.

பெண்கள் இந்தியாவின் சொத்துக்கள். மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவோம் என்று உறுதியளிக்கிறேன். அதுபோல மத்திய அரசு அலுவலக பணிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். இந்திய வங்கிகளில் இருந்து மிக பெரிய தொகையை எடுத்து பணக்காரர்களுக்கு கொடுத்தாரே தவிர வேலையில்லா இளைஞர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் வெற்று அறிவிப்பை மட்டும் செய்து வந்தார். தமிழகத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாங்கள் உதவி புரிய விரும்புகிறோம்.

நாங்கள் இந்தியாவை கிராமங்களில் இருந்தும், மாநகர் மற்றும் மாநிலங்களில் இருந்தும் நடத்த விரும்புகிறோம். பிரதமரின் அலுவலகத்தில் இருந்து நடத்தப்படக்கூடாது என்று நினைக்கிறோம். இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாக்க மோடியை தோற்கடிப்பது நமது கடமை. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்–அமைச்சராக வரவேண்டும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story