மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 12 April 2019 11:15 PM GMT (Updated: 12 April 2019 2:13 PM GMT)

மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகம் என்று தேர்தல் பிரசாரத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மேச்சேரி பஸ் நிலையம் அருகில் நேற்று தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் நல்ல ஆட்சி, நிலையான ஆட்சி அமைய தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதுவரை நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட தற்போது நடைபெறும் தேர்தலில் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் மட்டும் தான் முன்மொழிந்தார். அவர்கள் கூட்டணியில் மற்ற யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே அவர்கள் கூட்டணியில் யார்? பிரதமர் வேட்பாளர் என்பதில் ஒற்றுமை இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி கட்சியினர் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று ஏற்றுக்கொண்டு உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியில் யார்? பிரதமர் வேட்பாளர் என்பது தெரியவில்லை.

நாட்டின் பாதுகாப்பு முக்கியம். எனவே நாடு பாதுகாப்பாக இருக்க மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அப்போது தான் மாநிலத்திற்கு போதுமான நிதி கிடைக்கும். அதனால் மத்தியில் நிலையான ஆட்சி அமைய டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வாக்கு அளிக்க வேண்டும்.

தற்போது நடைபெற உள்ளது நாடாளுமன்ற தேர்தல். ஆனால் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் போன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். எனவே மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகம். எதை செயல் படுத்த முடியுமோ, அந்த திட்டத்தை தான் தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. கூட்டணி அறிவித்து உள்ளது. ராகுல்காந்தி அறிவித்து உள்ள ரூ.72 ஆயிரம் திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் ஆகும்.

மேட்டூர் உபரி நீர் திட்டம் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயே தொடங்கப்பட்டது. தற்போது 45 சதவீதம் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. 55 சதவீதம் ஆய்வு பணிகள் மட்டுமே மீதம் உள்ளது. இந்த பணி விரைவில் முடிக்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போன்று ஓமலூர், மேச்சேரி அருகே காமனேரியில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும். அந்த பூங்காவில் சேலம் மாவட்டத்தில் விளையும் காய்கறிகளை சேமித்து வைத்து ஒரு மாதம் வரை பதப்படுத்தி வைக்கப்படும். சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் ஆயிரம் ஏக்கரில் கால்நடை பூங்கா அமைக்கப்படும். இங்கு தரமான கால்நடை கன்றுகள் வளர்க்கப்பட்டு கலப்பின பசுக்கள் மற்றும் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப்படும்.

அதே போன்று மாடு வளர்ச்சிக்கு தேவையான புது ரக கால்நடை பூங்கா அமைக்கப்படும். இங்கு புது கலப்பின பசுக்கள், காங்கேயம் இன பசுக்கள், மற்றும் ஆடு, கோழிகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை இந்த பூங்காவிற்கு கொண்டு வந்து உரிய விலையில் விற்கலாம்.

மேச்சேரி பகுதிக்கு புறவழிச்சாலையும், அதே போன்று ஓமலூர் முதல் மேச்சேரி வரை சாலை அகலப்படுத்தப்படும். தொப்பூரில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாக பவானி வரை 4 வழிச்சாலை அமைக்கப்படும். இந்தியாவில் சிறப்பான சாலை வசதி உள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்தவுடன், கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் முதல் கோரிக்கையாக வைக்கப்படும். மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிந்தவுடன் தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

தமிழக அரசு உங்கள் அரசு. மக்கள் அரசு. எனவே மத்தியில் நிலையான ஆட்சி அமைய அன்புமணி ராமதாசுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story