போக்குவரத்து நெரிசலை குறைக்க காட்பாடியில் 2–வது ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வாக்குறுதி


போக்குவரத்து நெரிசலை குறைக்க காட்பாடியில் 2–வது ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வாக்குறுதி
x
தினத்தந்தி 12 April 2019 10:45 PM GMT (Updated: 12 April 2019 4:17 PM GMT)

காட்பாடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2–வது ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அரக்கோணம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசினார்.

காட்பாடி, 

அ.தி.மு.க. கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளராக முன்னாள் மத்தியமந்திரி ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். இவர் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் பள்ளிக்குப்பம், பெரியபுதூர், கல்புதூர், செங்குட்டை, வசந்தபுரம், குமரப்பநகர், கிளித்தான்பட்டறை, திருவள்ளுவர் தெரு, முத்தமிழ் நகர், பழையகாட்பாடி, வி.ஜி.ராவ் நகர், பாரதிநகர், கழிஞ்சூர், திருநகர், காந்திநகர், ராதாகிருஷ்ணன் நகர், காங்கேயநல்லூர் ரோடு, விருதம்பட்டு, பிரம்மபுரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

மேலும் வேலூர் சேண்பாக்கம், முள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

கடலூர்– சித்தூர் சாலையில் காட்பாடி பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, காட்பாடி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான 2–வது ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். காட்பாடியில் தாலுகா மருத்துவமனை இதுவரை அமைக்கப்படவில்லை. தாலுகா மருத்துவமனை அமைக்கப்படும்.

காட்பாடியில் போக்குவரத்து பணிமனை ஏற்படுத்தப்படும். காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடியில் அரசு கலைக்கல்லூரி ஏற்படுத்தப்படும்.

முதியோர் உதவித்தொகை வாங்கிக்கொண்டிருந்த சிலருக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். நான் வெற்றிபெற்றவுடன் அவர்களுக்கு மீண்டும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

காங்கேயநல்லூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை நலிவடைந்துள்ளது. அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொகுதி மக்கள் கூறிய அடிப்படை வசதிகள் குறித்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பி.நாராயணன், காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், பொதுக்குழு உறுப்பினர் ரமாதேவி எம்.ஆர்.ரெட்டி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஆனந்தன், வட்ட செயலாளர் கே.ஆர்.ரவி, பா.ம.க. மாநில முன்னாள் துணைப்பொது செயலாளர் எம்.கே.முரளி, சட்டப்பிரிவு துணைசெயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக்ராஜா, இளைஞர் சங்க மாநிலதுணைச் செயலாளர் சரவணன், மாநகர அமைப்பு செயலாளர் பாண்டியன் மற்றும் பா.ஜ.க., தே.மு.தி.க. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்குகள் சேகரித்தனர்.


Next Story