எந்திரங்களின் உறுதி தன்மையை சரிபார்க்க அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு
வாக்குப்பதிவு எந்திரங்களில் உறுதி தன்மையை சரிபார்க்க அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 134 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. அதில் 296 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தலின் போது 735 வாக்குப்பதிவு எந்திரங்களும், 385 கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் 388 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம், பெயர் மற்றும் புகைப்படம் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
முன்னதாக இதில் கலந்துகொண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மாதிரி வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்டது. இதில் 20 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து கொள்ளப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் 1,000 மாதிரி வாக்குப்பதிவுகள் செய்யப்பட்டு எந்திரங்களின் உறுதி தன்மை சரிபார்க்கப்பட்டது.
இதனை திருவண்ணாமலை உதவி கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் மனோகரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story