அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை‘பரிசு பெட்டியை கொடுத்துவிட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார்’ டி.டி.வி.தினகரன் மீது கமல்ஹாசன் தாக்கு


அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை‘பரிசு பெட்டியை கொடுத்துவிட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார்’ டி.டி.வி.தினகரன் மீது கமல்ஹாசன் தாக்கு
x
தினத்தந்தி 12 April 2019 11:15 PM GMT (Updated: 12 April 2019 6:12 PM GMT)

அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை. சின்ன பரிசு பெட்டியை கொடுத்து விட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார் என டி.டி.வி.தினகரனை கமல்ஹாசன் தாக்கி பேசினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சம்பத் ராமதாஸ், தஞ்சை சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் துரைசாமி ஆகியோரை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே நேற்று காலை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்த கூட்டம் காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை. மற்றவர்கள் பெரிய தொகையை செலவு செய்து கூட்டத்தை திரட்டுகிறார்கள். அந்த மாதிரி எங்களால் செலவு பண்ண முடியாது. கவலையில்லாமல் கொள்ளையடிக்கும் கூட்டத்தை அகற்றியே ஆக வேண்டும். நீங்கள் செயல்படாமல் இருந்தால் கொள்ளையடிப்பவர்கள் விலக மாட்டார்கள்.

அரிய வாய்ப்பு இப்போது ஆரம்பித்து இருக்கிறது. தொடர்ச்சியாக வாய்ப்புகளும் வரும். அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மனதை தளரவிடாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள். அதற்கு இங்கே கூடியிருக்கும் கூட்டமே சான்று. நல்லது நடக்கும் என்று கூடியிருக்கிறீர்கள்.

ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நாம் நகர்ந்து செல்கிறோம். இதுவரை வாக்களித்து ஏமாற்றம் அடைந்த முதியவர்கள், பெண்கள் அனைவரும் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும். இப்ப ஒருத்தர் வந்திருக்கிறார். அவர் மூன்றாவதாக துளிர்விட்ட இலை. அந்த இலை எப்படி வந்தது? அவர்கள் யார்? என்ன செய்தார்கள்? என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர் நல்லா சிரிக்கிறார். அதனால் நல்ல அரசியல் செய்வார் என்று நம்புகிறோம் என சொல்கிறார்கள். அது எப்படி செய்ய முடியும்?. அவர் சரிவர மாட்டார். நீங்கள் எப்படி அவரை விடலாம்.

உங்களுக்கு சின்ன பரிசு பெட்டியை கொடுப்பார். அதை கொடுத்து விட்டு அரசின் கஜானாவை காலி செய்துவிடுவார் என்பதை மறந்து விடாதீர்கள். நான் வாக்கை வாங்க வரவில்லை. உங்கள் கடமையை நினைவுபடுத்த வந்து இருக்கிறேன்.

வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு நடந்து செல்லும்போது தமிழகத்தை பற்றி யோசித்துக்கொண்டு சென்று தேடினால் உங்களது கண்ணுக்கு டார்ச் லைட் தென்படும். தஞ்சையில் குப்பைக்கிடங்கு நகரத்தின் நடுவே உள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. கொஞ்சம் அறிவு இருப்பவர்களுக்கு கூட குப்பையை அகற்ற தெரியும். குப்பையை அகற்ற தெரியாதவர்கள் ஆட்சியில் உள்ளனர். குடிநீரில் சாக்கடை கலக்கக்கூடாது என்று தெரியாதவர்களை எப்படி ஆள விட்டோம்?. இதற்கு நாம்தான் வருத்தப்பட வேண்டும்.

காவிரி என்று சண்டைபோட்டு கொண்டே இருக்கிறோம். விவசாயிகளுக்கு பன்முக விவசாயத்தை கற்று கொடுக்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இப்போது என்ன லாபம் கிடைக்கிறதோ அதைவிட 100 மடங்கு வருமானம் வர செய்ய முடியும். அதை தான் நாங்கள் செய்யப்போகிறோம். காய்கறி விவசாயிகளுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய சேமிப்பு கிடங்கு கொண்டு வருவோம். நேரம் மிக குறைவாக இருக்கிறது. தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு வேண்டுமானால் கேட்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அற்புதமான சாளரம் இருக்கிறது. அதை உடைத்து கதவாக மாற்ற வேண்டியது உங்களது பொறுப்பு. இந்தியாவின் தலைவாசலாக தமிழகத்தை மாற்றி காட்ட வேண்டும். தஞ்சையில் நின்று கொண்டு சொல்கிறேன். அதற்கான ஆரம்ப விதையை நீங்கள் தூவ வேண்டும். தஞ்சை விவசாயிகள் எந்த பயிரையும் வளர்த்து விடுவார்கள்.

நேர்மையான விதையை விதைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. வருகிற 18-ந் தேதி விதையை விதையுங்கள். மக்கள் நலனில் ஆசை இருக்கிறது. அரசியலில் நாங்கள் லாபம் பார்க்க வரவில்லை. உங்கள் மனதில் இடம் கிடைத்துவிட்டால் நாளை நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story