காணாமல்போன பெண் காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு தற்கொலையா? போலீசார் விசாரணை
காணாமல்போன பெண் காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்,
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள பரஞ்சேவழி, நால்ரோடு புதூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பத்மா(35). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், பத்மா கோபித்து கொண்டு, அவரது தந்தை பழனிச்சாமி வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் தனது தந்தையிடம், காங்கேயத்திற்கு சென்று மாத்திரை வாங்கி வருவதாக கூறி விட்டு, கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்து சென்றார். ஆனால் திரும்பி அவர் வீட்டிற்கு வரவில்லையாம். இதனால் பழனிச்சாமி பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டம், கோம்புப்பாளையம் காவிரி ஆற்றின் ஓரத்தில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு பிணமாக கிடந்தது காணாமல்போன காங்கேயத்தை சேர்ந்த பத்மா என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு வந்து, தனது மகள் தான் என்று அடையாளம் காட்டினார். இதையடுத்து பத்மாவின் உடலை காவிரி ஆற்றின் கரையில் வைத்து, போலீசார் முன்னிலையில் அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, குடும்ப தகராறில் பத்மா ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் பிரச்சினையா என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து காணாமல்போன பெண் ஆற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story