டாஸ்மாக் மதுபான விற்பனை தொகையை தேர்தல் பறக்கும் படையினர் பறித்தால் நிர்வாகம் பொறுப்பாகாது அதிகாரிகள் உத்தரவால் ஊழியர்கள் புலம்பல்


டாஸ்மாக் மதுபான விற்பனை தொகையை தேர்தல் பறக்கும் படையினர் பறித்தால் நிர்வாகம் பொறுப்பாகாது அதிகாரிகள் உத்தரவால் ஊழியர்கள் புலம்பல்
x
தினத்தந்தி 12 April 2019 10:15 PM GMT (Updated: 12 April 2019 7:21 PM GMT)

டாஸ்மாக் மதுபான விற்பனை தொகையை தேர்தல் பறக்கும்படையினர் பறித்தால் நிர்வாகம் பொறுப்பாகாது என்ற அதிகாரிகள் உத்தரவினால் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

திருச்சி, 

தேர்தலையொட்டி வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. 15-ந் தேதி விற்பனை தொகையை மறுநாள் 16-ந் தேதி பகல் 12 மணிக்குள் வங்கியில் செலுத்த வேண்டும் என ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வங்கியில் தொகையை செலுத்த செல்லும் போது பூர்த்தி செய்த வங்கி படிவம், பில் புக், சிட்டா மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை தவறாமல் எடுத்து செல்ல வேண்டும் எனவும், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் பறக்கும்படை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டால் பில் புக், சிட்டா, அடையாள அட்டை, பூர்த்தி செய்த படிவம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லும் போது விற்பனை தொகையை தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்தால் டாஸ்மாக் நிர்வாகம் எவ்வித உதவியும் செய்ய இயலாது. அதற்கு ஊழியர்களே பொறுப்பாகும் என அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக திருச்சி டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை தொகையை தினமும் இரவில் எண்ணி பாதுகாப்பாக கடையில் உள்ள பெட்டகத்தில் வைப்பதும், மறுநாள் காலையில் வந்து அந்த பணத்தை எடுத்து வங்கியில் செலுத்துவதும் நடைமுறை. மேற்பார்வையாளர் வீடுகளுக்கு பணத்தை எடுத்து செல்லக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. ஒரு சிலர் வீட்டிற்கு எடுத்து சென்று வங்கியில் செலுத்தும் நேரங்களில் தான் கொள்ளையர்கள் வழிப்பறி செய்து பணத்தை பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

15-ந் தேதி விற்பனை தொகையை இரவு 10 மணிக்கு மேல் எங்கு கொண்டு செல்வது என தெரியாமல் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்லும் போது செல்லும் வழியில் பறக்கும்படையினர் பிடித்தால் பறிமுதல் செய்துவிடுவார்கள். எனவே அதற்கு உரிய வழிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். மேலும் விற்பனை தொகையை எடுத்து செல்லும் போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஒரு படிவம் வழங்க வேண்டும். அதனை தேர்தல் பறக்கும்படையினரிடம் காண்பித்தால் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story