மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர அ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர அ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 12 April 2019 11:15 PM GMT (Updated: 12 April 2019 7:30 PM GMT)

மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர அ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு, பரிகம், மேல்ஈசல்பட்டி, மேல்பூரிக்கல், கீழ்பூரிக்கல், தொப்பூர், உமியம்பட்டி, செக்காரப்பட்டி, பப்பிரெட்டியூர், சோழியானூர், மணியக்காரனூர், குக்கம்பட்டியான் காட்டுவலவு ஆகிய கிராமங்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பிரசார கூட்டங்களில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர அ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் சூழல் உருவாகும். அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது. விவசாயிகளின் நலனை காக்க அ.தி.மு.க. கூட்டணி எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இந்த பிரசார கூட்டங்களில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், முன்னாள் தொகுதி செயலாளர் பச்சியப்பன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன், மாவட்ட செயலாளர் சண் முகம், கூட்டுறவு சங்க தலைவர் சிவசக்தி, தே.மு.தி.க. மாவட்ட அவைத்தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் அரங்கநாதன், பா.ஜனதா ஒன்றிய தலைவர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, மாது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story