தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து நாமக்கல்லில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்


தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து நாமக்கல்லில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
x
தினத்தந்தி 12 April 2019 11:00 PM GMT (Updated: 12 April 2019 7:58 PM GMT)

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து இன்று (சனிக்கிழமை) நாமக்கல்லில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளார்.

நாமக்கல், 

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து இன்று (சனிக் கிழமை) மாலை நாமக்கல்லில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்காக நாமக்கல் பொம்மைகுட்டை மேட்டில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடந்தது.

இந்த நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான செ.காந்திச்செல்வன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கொ.ம.தே.க. சார்பில் போட்டியிடும் ஏ.கே.பி.சின்ராஜ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை காண முடிகிறது. மத்தியில் உள்ள மோடி அரசு, மாநிலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசு ஆகியவற்றின் மக்கள் விரோத போக்கால், இந்த தேர்தலில் எங்களுக்கு வலு சேர்க்கும் சூழல் உள்ளது. நாமக்கல்லில் வேட்பாளர் சின்ராஜ் குறைந்தது 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை(இன்று) மாலை 5 மணியளவில் பொம்மைகுட்டை மேட்டில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளார். அதன்பிறகு சங்ககிரியில் இரவு 7 மணிக்கு சின்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அதில் தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். அதேபோல் சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் வார்டு கழக செயலாளர்கள், அனைத்துதொழிற்சங்கங்கள்,விவசாய சங்கங்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவ்வாறு கூறினார்.

Next Story