பரமத்திவேலூரில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு


பரமத்திவேலூரில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 12 April 2019 10:30 PM GMT (Updated: 12 April 2019 8:06 PM GMT)

பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் திறந்த ஜீப்பில் நின்றவாறு வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பரமத்தி வேலூர்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவரை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோரும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் பரமத்திவேலூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசுகளின் நலத்திட்டங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை உள்ளிட்ட பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த வேட்பாளர் காளியப்பனுக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய குமார், நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், கொங்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கவுரிசங்கர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story