தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி ஓட்டுப்பதிவுக்கு தேவையான 106 வகை பொருட்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டன


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி ஓட்டுப்பதிவுக்கு தேவையான 106 வகை பொருட்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டன
x
தினத்தந்தி 12 April 2019 9:45 PM GMT (Updated: 12 April 2019 8:19 PM GMT)

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி ஓட்டுப்பதிவுக்கு தேவையான 106 வகையான பொருட்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஓட்டுப்பதிவுக்கு தேவையான ஆவணங்கள், படிவங்கள், உறைகள், பேனா, பென்சில், குண்டூசி உள்பட 106 வகையான பொருட்கள் சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்டு உள்ளன. அழியாத மை மட்டும் இன்று (சனிக்கிழமை) கொண்டு வரப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று வாக்குச்சாவடிகளில் பார்வையற்றவர்கள் வேட்பாளர்களின் பெயர்களை அறிந்து கொள்ளும் வகையில் பிரைய்லி வாக்குச்சீட்டு கோவையில் தனியாக அச்சடிக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சீட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வைக்கப்படுகிறது. பார்வையற்றவர்கள் வரும்போது, அதனை படித்து தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர் எத்தனையாவது எண்ணில் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் உள்ள வரிசை எண் மூலம் வாக்குப்பதிவு செய்யலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சுமார் 1,000 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. இந்த சக்கர நாற்காலிகள் அனைத்தும் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி ஆகியோர் பார்வையிட்டனர். இதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

Next Story