கோவில்பட்டியில் மினி லாரி-மொபட் மோதல்; தையல் கடைக்காரர் பலி
கோவில்பட்டியில் மினி லாரி-மொபட் மோதிய விபத்தில் தையல் கடைக்காரர் தலை நசுங்கி பலியானார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி -மந்திதோப்பு ரோடு கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 51). தையல் தொழிலாளியான இவர் கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் தையல் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து தையல் கடைக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றார்.
கோவில்பட்டி-மந்திதோப்பு ரோடு டால்துரை பங்களா பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட முத்துராஜின் மீது மினிலாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த முத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினிலாரி டிரைவரான நெல்லையை அடுத்த பேட்டையைச் சேர்ந்த அப்துல் லத்தீப் மகன் அப்துல் ரஹ்மானை (38) கைது செய்தனர். நெல்லையில் இருந்து அரிசி லோடு ஏற்றிய மினிலாரி, கோவில்பட்டி பகுதியில் உள்ள கடைகளுக்கு அரிசி சப்ளை செய்ய சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் இறந்த முத்துராஜிக்கு ஜெயலட்சுமி (48) என்ற மனைவியும், கிருஷ்ணகுமார் (28) என்ற மகனும், கீதா (25) என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story