அந்தியூர் அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு தீர்த்தம் எடுக்க வந்தபோது பரிதாபம்
அந்தியூர் அருகே தீர்த்தம் எடுக்க வந்தபோது ஆற்றில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கருக்கம்பாளையம் புளியங்கரட்டூரை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (30). இவர்களுக்கு நிரஞ்சன் (10), சிவரஞ்சன் (9) என்ற மகன்கள் உள்ளனர். இதில் நிரஞ்சன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் சிவரஞ்சன் 4–ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கருக்கம்பாளையம் பகுதியில் உள்ள கோவில் விழாவையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பவானி ஆற்றுக்கு 50–க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் மாலை வந்தனர்.
இவர்களுடன் சாமியப்பன், சிவரஞ்சன் ஆகியோரும் வந்தனர். பக்தர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது சிவரஞ்சன் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றான். இதில் அவன் தண்ணீரில் மூழ்கி இறந்தான்.
ஆனால் அவன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியாமல் எல்லோரும் கரைக்கு வந்தனர். கரைக்கு சிவரஞ்சன் வராததை கண்டதும் சாமியப்பன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர் ஆற்றில் இறங்கி தேட தொடங்கினார். இதற்கிடையே இருட்டி விட்டதால் தேடும் பணியை அவர்கள் கைவிட்டனர்.
இந்த நிலையில் சிவரஞ்சன் உடலை தேடும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியது. இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கி இருந்த சிவரஞ்சனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உடனே ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவரஞ்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 2 மாதத்தில் இங்குள்ள ஆற்றில் மூழ்கி 5 பேர் இறந்து உள்ளனர். எனவே ஆற்றில் மூழ்கி இறப்பவர்களை தடுக்கும் வகையில் இங்கு போலீஸ் துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்,’ என்றனர்.