பர்கூர் வனப்பகுதியில் பாறையில் கிடந்த நாட்டுத்துப்பாக்கி -5 மூட்டை மான் இறைச்சி பறிமுதல்; வேட்டையாடிய கும்பல் தப்பி ஓட்டம்


பர்கூர் வனப்பகுதியில் பாறையில் கிடந்த நாட்டுத்துப்பாக்கி -5 மூட்டை மான் இறைச்சி பறிமுதல்; வேட்டையாடிய கும்பல் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 12 April 2019 10:53 PM GMT (Updated: 12 April 2019 10:53 PM GMT)

பர்கூர் வனப்பகுதியில் பாறையில் கிடந்த நாட்டுத்துப்பாக்கி-5 மூட்டை மான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தார்கள். ஆனால் வேட்டையாடிய கும்பல் தப்பி ஓடிவிட்டது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் நேற்று காலை 8 மணி அளவில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றார்கள். அப்போது போதைமலை என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய பாறையில் 7 பேர் உட்கார்ந்து இருந்தார்கள். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களை பிடிக்க ஓடினார்கள். ஆனால் அதற்குள் 7 பேரும் காட்டுக்குள் மின்னலாக மறைந்துவிட்டார்கள்.

அதன்பின்னர் வனத்துறையினர் பாறைக்கு சென்று பார்த்தார்கள். அங்கு 5 மூட்டைகளில் வெயிலில் காய வைத்த மான் இறைச்சி, ஒரு நாட்டுத்துப்பாக்கி, 6 கத்திகள், ஒரு கோடாரி, துப்பாக்கிக்கு பயன்படும் ஒரு கிலோ வெடிமருந்து மற்றும் சமையல் பாத்திரங்கள் ஆகியவை கிடந்தன.


தப்பி ஓடிய 7 பேரும் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு மான்களை வேட்டையாடி உள்ளார்கள். பின்னர் இறைச்சியை துண்டுதுண்டாக வெட்டி பாறையில் காயவைத்து அதை 5 மூட்டைகளில் கட்டியுள்ளார்கள். மேலும் அங்கேயே இறைச்சியை சமைத்தும் சாப்பிட்டுள்ளார்கள்.

அதன்பிறகு இறைச்சியை அவர்கள் விற்பதற்காக கடத்த முயன்றபோதுதான் வனத்துறையினர் அங்கு சென்றுள்ளார்கள். அதனால் பிடிபட்டு விடக்கூடாது என்று அவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். அதில் 2 பேர் மட்டும் சேலம் மாவட்டம் கோவிந்தப்பாடியை சேர்ந்தவர்கள் என்று வனத்துறையினருக்கு அடையாளம் தெரிந்தது. அதனால் அவர்கள் 7 பேரையும் விரைவில் பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் தெரிவித்தார்கள்.

இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 5 மூட்டை மான் இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து, கத்திகள், கோடாரி, சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை வனத்துறையினர் பவானி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைத்தார்கள்.

Next Story