தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை, மதுவிற்றவர் கைது - 27 மதுபாட்டில்கள் பறிமுதல்


தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை, மதுவிற்றவர் கைது - 27 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 April 2019 11:00 PM GMT (Updated: 12 April 2019 11:00 PM GMT)

செங்கிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மதுவிற்றவரை கைது செய்து, அவரிடம் இருந்த 27 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டியில் இருந்து கந்தர்வக்கோட்டை சாலையில் தஞ்சை தாசில்தார் சுரேஷ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சிலரிடம் சோதனை நடத்தினர். அப்போது சிலரிடம் மதுபாட்டில்கள் இருப்பதை பார்த்த அதிகாரிகள் இதனை எங்கிருந்து வாங்கி வருகிறீர்கள் என கேட்டுள்ளனர். அவர்கள் செங்கிப்பட்டி கந்தர்வக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வருவதாக கூறியதாக தெரிகிறது.

டாஸ்மாக் கடை 12 மணிக்கு தான் திறக்கும். ஆனால் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது காலை 11 மணி ஆகும். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அப்போது அங்கே பாரில் வேலை செய்து கொண்டிருந்த செங்கிப்பட்டியை சேர்ந்த காமராஜ் (வயது52) என்பவர் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்தார். இதுகுறித்து தாசில்தார் செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுமதியின்றி மதுவிற்ற காமராஜை கைது செய்து, அவரிடம் இருந்த 27 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story