சாமி தரிசனம் செய்ய சென்றபோது மலைப்பாதையில் சிக்கி தவித்த தாசில்தார் மனைவி - தீயணைப்பு படையினர் மீட்டனர்

சாமி தரிசனம் செய்ய சென்றபோது மலைப்பாதையில் சிக்கி தவித்த தாசில்தார் மனைவியை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல்-கரூர் மாவட்ட எல்லையில் ரெங்கமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் மல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் 2 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி மதுரை அய்யர் பங்களா புகழேந்தி தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் பழனியப்பன் (வயது 66) தனது குடும்பத்தினருடன் நேற்று கோவிலுக்கு வந்தார். பழனியப்பன், அவருடைய மனைவி மங்கையர்க்கரசி (64), மகன் சிவசுப்பிரமணி (35), மருமகள் பாண்டிதேவி (26), பேரன் ஹரி (8), பேத்தி ராஜபைரவி (3) மற்றும் உறவினர் அழகர் (61) ஆகியோர் ஒரு காரில் வந்தனர்.
மலையடிவாரத்தில் காரை நிறுத்தி விட்டு நேற்று மதியம் மலைப்பாதை வழியாக மலை உச்சிக்கு நடந்து சென்றனர். பின்னர் அவர்கள், சாமி தரிசனம் செய்து விட்டு மாலையில் கீழே இறங்கி கொண்டிருந்தனர். 500 மீட்டர் உயரத்துக்கு வந்தவுடன் மங்கையர்க்கரசியால் இறங்க முடியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் குடும்பத்தினர், அவரை மட்டும் அங்கேயே விட்டு விட்டு கீழே இறங்கி வந்து விட்டனர். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு படையினர் மலைக்கு ஏறி சென்றனர்.
பின்னர் அங்கு தவித்து கொண்டிருந்த மங்கையர்க்கரசியை கீழே இறக்கி கொண்டு வந்தனர். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






