பணம் மதிப்பிழப்பு, சரக்கு-சேவையை திணித்த நரேந்திரமோடியின் நடவடிக்கைகள் தேசத்துக்கு எதிரானவை - தேனி பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பகிரங்க குற்றச்சாட்டு


பணம் மதிப்பிழப்பு, சரக்கு-சேவையை திணித்த நரேந்திரமோடியின் நடவடிக்கைகள் தேசத்துக்கு எதிரானவை - தேனி பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 April 2019 11:15 PM GMT (Updated: 12 April 2019 11:01 PM GMT)

பணம் மதிப்பிழப்பு, சரக்கு-சேவையை திணித்த நரேந்திரமோடியின் நடவடிக்கைகள் தேசத்துக்கு எதிரானவை என்று தேனி பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

தேனி,

தேனி அன்னஞ்சி விலக்கு அருகில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு, தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்கள் விரும்பியதை உள்ளடக்கியதாக இருப்பதாக நண்பர்கள் கூறுகிறார்கள். தனிமனிதனின் குரலாக இல்லாமல், ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக எங்களின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. லட்சக்கணக்காக மக்கள் தேர்தல் அறிக்கையை கொண்டாடுகிறார்கள். விவசாயிகள், சிறுவணிகர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் கலந்து பேசி தேர்தல் அறிக்கையை உருவாக்கி இருக்கிறோம்.

இது மனநிலை பிறண்டவரின் மனசாட்சியின் குரலாக இல்லை. ஒட்டு மொத்த தேசத்தின் விருப்பத்தின் குரல். தமிழக மக்கள் ‘நீட்’ தேர்வை பற்றி என்னிடம் கூறினார்கள். தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ‘நீட்’ தேர்வை விரும்பவில்லை என்றார்கள். தமிழக மக்கள் தங்களுக்கு எப்படிப்பட்ட தேர்வு வேண்டும் அதை நாங்களே முடிவு செய்வோம் என்று கூறியதாக தெரிவித்தனர். ஏழை மாணவி அனிதா ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்ததை அறிவேன். எனவே, தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வரியை உருவாக்கி இருக்கிறோம்.

அந்த ஒரு வரி, தற்கொலை செய்த அனிதாவை பெருமைப்படுத்துகிறது. ‘நீட்’ தேர்வு வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை தமிழ்நாடு முடிவு செய்து கொள்ளும் என்று அந்த ஒரு வரி சொல்கிறது. தமிழகத்தின் மீது யாரும், எதையும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது.

தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்களின் குரல் எங்களின் தேர்தல் அறிக்கையில் ஒலிக்கும். தமிழ்நாடு, மராட்டியம் உள்பட அனைத்து மாநில மக்களின் குரலை கேட்கவே விரும்புவதாக தேர்தல் அறிக்கை தயாரித்தவர்களிடம் கூறினேன். இதில் மிகவும் புரட்சிகரமானது, ‘நியாய்’ எனும் அற்புதமான திட்டம். இந்த தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு செய்ய இருக்கும் அற்புதமான திட்டம் அது. உலகில் எந்த நாட்டிலும் இதுவரை அப்படிப்பட்ட திட்டத்தை செயல்படுத்தியது இல்லை.

பிரதமர் நரேந்திரமோடியின் அரசு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை 15 கோடீஸ்வரர்களுக்கு கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சி அதே பணத்தை ஏழை மக்களுக்கு அள்ளி வழங்கும். நாங்கள் 15 கோடீஸ்வரர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். 25 கோடி மக்களுக்கு அந்த பணத்தை வழங்குவோம். இதுவரை மோடி அரசு ஒரு நாளைக்கு 3½ பைசாவை தான் மக்களுக்கு வழங்கியது.

இந்தியாவில் இருக்கும் 20 சதவீத ஏழை மக்களுக்கு ஓராண்டுக்கு ரூ.72 ஆயிரத்தை வழங்குவோம். இதன் மூலம் 20 சதவீத ஏழை குடும்பங்கள், 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பெறுவார்கள். நரேந்திரமோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று கூறினார். ஆனால், நாங்கள் அவ்வாறு ரூ.15 லட்சம் தரமாட்டோம். உங்களிடம் பொய் சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. அவ்வாறு ரூ.15 லட்சம் கொடுத்தால், தேசத்தின் பொருளாதாரம் சீரழிந்து விடும். ஆனால், ஏழை மக்களுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை, நிச்சயம் எங்களால் கொடுக்க முடியும். அதை கொடுப்போம்.

நமது தேசத்தின் பொருளாதாரத்துக்கு எந்தவித சரிவும் இல்லாமல், அந்த திட்டத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். இப்படி ஏழைகளுக்கு பணத்தை கொடுப்பதால், இந்திய பொருளாதாரம் வலுவடையும். நரேந்திரமோடி பண மதிப்பிழப்பு, சரக்கு-சேவை வரி ஆகியவற்றை மக்கள் மீது திணித்தார். உங்கள் பையில் இருந்த பணத்தை அவர் எடுத்து கொண்டார். பெண்களிடம் இருந்து பணத்தை திருடி கொண்டார். கையில் இருந்த பணத்தை வங்கியில் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினார்.

உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு 28 சதவீத வரியை மக்கள் மீது திணித்தார். உங்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி அனில் அம்பானி, நிரவ்மோடி உள்ளிட்டோருக்கு வழங்கினார். இதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர். பொருட்களை வாங்க ஆளில்லாமல் தொழில் மந்தமானது. தொழிற்சாலைகள் உற்பத்தி இல்லாமல் முடங்கி விட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது. மோடியின் அனைத்து நடவடிக்கைகளும், தேசத்துக்கு எதிர்மறையான விளைவுகளை தான் ஏற்படுத்தின.

பெட்ரோலை என்ஜினில் இருந்து எடுத்துவிட்டு, உடனே அந்த என்ஜினை மோடி அணைத்து விட்டார். அந்த சாவியை தூக்கி 15 கோடீஸ்வரர்களிடம் கொடுத்துவிட்டார். ‘நியாய்’ திட்டத்தின் மூலம் மீண்டும் இந்தியா எனும் வாகனத்தில் நாம் பெட்ரோலை திரும்ப நிரப்புவோம். பின்னர், உங்கள் கையில் இருக்கும் சாவியை கொண்டு இந்தியா என்ற அந்த என்ஜினை இயக்க முடியும்.

பின்னலாடை தொழில்களின் தலைநகரான திருப்பூர் இன்றைக்கு மோடியின் நடவடிக்கையால் முழுவதும் சீரழிந்து கிடக்கிறது. இந்தியாவின் பட்டுத் தொழில் தலைநகரான காஞ்சீபுரம் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் புத்துயிர் பெற்று எழுச்சி பெறும். இந்த தொழிற்சாலைகள் மீண்டும் தொடங்கி வேலை செய்ய தொடங்கியவுடன், உங்கள் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்திய பொருளாதாரம் பெரிய முன்னேற்றத்தை நோக்கி தாவும். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், மோடி ஒருவரைத் தவிர.

மோடி எப்போது மகிழ்ச்சியாக இருப்பார் என்றால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தூக்கி அனில் அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு கொடுக்கும் போது தான் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். மோடி எப்போது மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார் என்றால் இந்தியர்கள் இனிமேல் ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டைபோடும் சூழலில் இருக்க மாட்டார்கள் என்றால் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்.

மோடியின் அடிப்படை சித்தாந்தமே இந்த நாட்டு மக்களிடம் வெறுப்பு அரசியலை விதைப்பது தான். ஆனால், எங்களின் தத்துவம் அன்பை உள்ளடக்கிய அரசியல் செய்வது. மோடி என்பவர் வெறுப்பின் ஒட்டுமொத்த உருவம். நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக இருக்கும்போது மோடியின் அரசியல் தனது சக்தியை இழந்துவிடும். மோடியின் வெறுப்பு அரசியலை நாம் வெறுப்பு அரசியலாக சந்திக்கப் போவது இல்லை. நாம் அன்பான, புரிந்து கொள்ளும் வகையிலான, நட்பு நிறைந்த அரசியலை கொண்டு தான் அந்த வெறுப்பு அரசியலை எதிர்கொள்ளப் போகிறோம். நாம் ஒருவரை, ஒருவர் மதிப்பதன் மூலம் அதை முன்னெடுத்து செல்ல முடியும்.

மோடி டெல்லியில் இருந்து கொண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியும் என்று கருதுகிறார். பிரதமர் அலுவலகத்தில் இருந்துகொண்டு தமிழக தலைமை செயலகத்தில் இருப்பவர்களை நிர்பந்திப்பதன் மூலம் தான் நினைத்ததை நிகழ்த்த முடியும் என்று நினைக்கிறார்.

மோடிக்கு தமிழகத்தின் வரலாறு தெரியாது. தமிழ் மொழியின் உணர்வும், வேகமும் அவருக்கு தெரியாது. நான் தந்தை பெரியாரின் புத்தகத்தை மோடிக்கு அன்பளிப்பாக கொடுக்க விரும்புகிறேன். அந்த புத்தகத்தை படித்த பிறகு அவர் தமிழகத்தை பற்றி புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன். அதுபோல், கருணாநிதியின் சில புத்தகங்களையும் அவருக்கு கொடுக்க விரும்புகிறேன்.

பிரதமருக்கு தமிழ்நாடு என்ன கருத்தியலின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதே புரியவில்லை. தமிழகத்தின் நீண்ட வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழக மக்கள் தான் தங்களின் வரலாற்றை நிர்ணயித்துள்ளனர். வேறு யாரையும் நிர்ணயிக்க அனுமதிக்கவில்லை. இந்த உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழக மக்கள் விரும்பாததை செய்ய வைக்க முடியாது என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். வெறுப்பும், கோபமும் தமிழக மக்களை ஒருநாளும் பணிய வைக்காது. ஆனால், அன்பாலும், நட்பாலும் தமிழக மக்களை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும்.

தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் அவர் செய்துள்ள அவமதிப்பை நாங்கள் பொறுத்துக் கொள்ள போவதில்லை. தமிழகத்தில் உள்ள விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வேதனைக்கு உட்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியதை நான் பார்த்தேன். அப்போது அவர்களை சந்தித்து நான் உங்களோடு இருக்கிறேன், காங்கிரஸ் இயக்கமும் உங்களோடு இருக்கிறது என்று கூறினேன். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள எல்லா மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். ஆனால், பிரதமருக்கு போராடும் விவசாயிகளை சந்திக்கக்கூட நேரம் இல்லை.

நாட்டில் உள்ள 15 கோடீஸ்வரர்களுக்கு ரூ.3½ லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்த மோடிக்கு, ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை. எனவே, 2019-ம் தேர்தல் முடிந்த பின்னர் விவசாயிகள் மனதில் இருக்கும் அச்சத்தை போக்கி, தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். தமிழக மக்களின் வேதனையிலும், சோதனையிலும் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும்.

சட்டத்தை மாற்றுவோம்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் முதல் நிதி நிலை அறிக்கையின்போதே, விவசாயிகளுக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வோம். ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளுக்கும் என்ன செய்யப் போகிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் அந்த நிதிநிலை அறிக்கை இருக்கும். அனில் அம்பானி மத்திய அரசு வங்கியில் ரூ.45 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, திருப்பி கட்டாமல் சொகுசாக இருக்கிறார். ஆனால், ஒரு ஏழை விவசாயி ரூ.20 ஆயிரமோ, ரூ.40 ஆயிரமோ கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாமல் போனால் அவரை சிறையில் தூக்கிப் போடுகிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது என்று ஒவ்வொரு விவசாயியும் கேட்கிறார்கள். எனவே, அந்த சட்டத்தையே நாங்கள் மாற்றுவதற்கு முடிவு செய்து விட்டோம். இனிமேல் கடனை கட்டவில்லை என்பதற்காக எந்த விவசாயியும் சிறைக்கு போகிற சம்பவமே நடக்காது. வாங்கிய கடனை கட்டவில்லை என்பதற்காக விவசாயி மீது கைது நடவடிக்கையை ஏதாவது அதிகாரி எடுத்தால் அந்த அதிகாரி மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் மத்திய அரசின் 22 லட்சம் வேலை பணியிடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் அந்த காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். நாட்டில் உள்ள பட்டியல் இன மக்கள், மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படாமல் உள்ள இடங்களையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பூர்த்தி செய்வோம். நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளில் இளைஞர்களுக்காக 10 லட்சம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.

இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்றால் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்று பல்வேறு அனுமதி பெற வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால், நாட்டின் ராணுவ ஒப்பந்தத்தை எந்த தகுதியும் இல்லாமல் அனில் அம்பானி உடனடியாக பெற்றுக் கொள்கிறார். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் ஒவ்வொரு அரசு அலுவலகங்களாக அலைந்து தான் சிறிய தொழிலையும் தொடங்க வேண்டிய நிலைமை உள்ளது. ஒவ்வொரு அலுவலகத்துக்கும் செல்லும்போதும் அங்கிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். அந்த லஞ்சத்தை கொடுத்து முடிப்பதற்குள் வியாபாரமே முடங்கும் நிலைமை உள்ளது.

எனவே, காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கு எந்த அலுவலகத்துக்கும் நேரில் செல்ல வேண்டிய தேவை இருக்காது என்று உறுதி அளிக்கிறேன். எந்த அனுமதியும் பெறாமல் தொழில் தொடங்கலாம். புதிய தொழில் தொடங்கி 3 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திய பிறகு தொழிலுக்கு தேவையான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.

ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தில், அந்த பணம் குடும்பத்தில் உள்ள பெண்ணின் வங்கிக் கணக்கில் தான் செலுத்தப்படும். நாட்டின் வளர்ச்சிக்கான பெண்களின் பங்களிப்புக்கு அங்கீகாரமாக இதை தருகிறோம். அதுபோல், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக் கீட்டுக் கான சட்டங்களை உடனடியாக அமல்படுத்துவோம். மத்திய அரசின் வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு 33 சதவீத பணியிடங்கள் ஒதுக் கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story