பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி அமைச்சரை காரை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு


பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி அமைச்சரை காரை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 April 2019 11:37 PM GMT (Updated: 12 April 2019 11:37 PM GMT)

ஆண்டாவூரணி கிராமத்தில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி அமைச்சரின் காரை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டி,

திருவாடானை யூனியனில் உள்ள பல்வேறு கிராமங்களில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சுற்றுபயணம் செய்து தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரை ஆதரித்து அமைச்சர் மணிகண்டன் கிராமம் கிராமமாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இந்த நிலையில் ஆண்டாவூரணி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்பதாலும், ஒரு சிலருக்கு வங்கி கணக்கில் மிகக்குறைந்த தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளதாலும் அதிருப்தியில் இருந்தனர். மேலும் முழுமையான தொகை வழங்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வாக்கு சேகரிக்க வரும் அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் ஆண்டாவூரணி கிராமத்திற்கு சென்று அங்கு சந்தை முன்பு கூடியிருந்த தெற்கு ஆண்டாவூரணி யை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பயிர் இழப்பீட்டு தொகை முழுமையாக விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும் அதனால் கருப்புக்கொடி காட்ட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உடனே அவர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆண்டாவூரணி கிராம விவசாயிகளின் கோரிக்கை குறித்து தெரிவித்தார். அப்போது அவர் இன்னும் ஒரு சில தினங்களில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை அனைத்து விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் கூறிய தகவலை போலீஸ் துணை சூப்பிரண்டு விவசாயிகளிடம் தெரிவித்து கருப்புக்கொடி காட்டுவதை தடுத்து நிறுத்தினார்.

அப்போது அமைச்சர் மற்றும் வேட்பாளரின் கார்கள் ஆண்டாவூரணி கிராமத்திற்குள் நுழைந்தன. இதைக்கண்டதும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அமைச்சரை சந்தித்து அவரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். கூட்டமாக அமைச்சரின் காரை முற்றுகையிட முயன்றதால் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து அந்த இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை அமைச்சர் மணிகண்டன் மற்றும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பின்னர் பயிர் காப்பீட்டு தொகை குறித்த விவரங்களை அமைச்சர் மணிகண்டன் பொதுமக்களிடம் விவரமாக தெரிவித்தார். அப்போது 3 நாட்களில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை உரிய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்து வாக்கு சேகரித்தார்.


Next Story