சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 April 2019 11:37 PM GMT (Updated: 12 April 2019 11:37 PM GMT)

ராமேசுவரம் சங்குமல் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரத்துக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். இதையடுத்து ராமேசுவரத்தை சுற்றுலா தலமாக அறிவித்து அங்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய–மாநில அரசுகள் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம், பக்தர்கள் தங்கும் விடுதி, ராமேசுவரம் நகரில் ஆங்காங்கே பூங்காக்கள், மற்றும் பாதாள சாக்கடை திட்டம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுக்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம் வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் மாலையில் பொழுதுபோக்க வசதியில்லாமல் இருந்து வந்தது. இதனை போக்க அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து சங்குமால் கடற்கரை வரை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அந்த பகுதியில் படகு போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.

இதுதவிர அம்ருத் சிட்டி என அறிவிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைக்கப்படும் இடத்தின் அருகே உள்ள கடற்கரையில் இருந்துதான் தெர்மாகோல் மூலம் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் கடலுக்கு சென்று வருவது வழக்கம். இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படும் என கருதி அப்பகுதியில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து நேற்று கடல் தொழிலாளர் சங்க சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின், மாவட்ட துணை தலைவர் ஜஸ்டின் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சி அதிகாரியிடம் மனு அளித்தனர். அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளுக்கும் பயனுள்ள திட்டமாக கருதப்படும் சங்குமால் கடற்கரை பூங்காவுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story