பொள்ளாச்சி பாலியல் விவகாரம், போலீஸ் காவல் முடிந்ததால் மணிவண்ணன் கோர்ட்டில் ஆஜர்
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான மணிவண்ணனுக்கு போலீஸ் காவல் முடிந்ததால், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை,
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்த மறுநாள் அந்த மாணவியின் அண்ணன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக மணிவண்ணன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சரண் அடைந்த மணிவண்ணனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதில் பாலியல் சம்பவத்தில் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலியல் வழக்கில் மணிவண்ணனை சேர்த்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் சி.பி. சி.ஐ.டி. போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் மணிவண்ணனின் நெருங்கிய நண்பரை பிடித்தும் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் மணிவண்ணனுக்கு போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று மாலை போலீசார் அவரை பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் மணிவண்ணனை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மணிவண்ணனை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story