காங்கிரஸ்– தி.மு.க. தடை ஏற்படுத்தின: ஜல்லிக்கட்டு நடைபெற காரணம் பிரதமர் மோடிதான் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்


காங்கிரஸ்– தி.மு.க. தடை ஏற்படுத்தின: ஜல்லிக்கட்டு நடைபெற காரணம் பிரதமர் மோடிதான் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்
x
தினத்தந்தி 12 April 2019 11:56 PM GMT (Updated: 12 April 2019 11:56 PM GMT)

ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ்–தி.மு.க. தடை ஏற்படுத்தினார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு காரணம் பிரதமர் மோடி தான் என்று துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரை,

தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், சமயநல்லூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

தி.மு.க.–காங்கிரஸ் ஆட்சியில் காளைமாட்டினை விலங்கினப் பட்டியலில் சேர்த்தார்கள். அதனால் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அதனால் மெரினாவில் 10 லட்சம் பேர் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது நான் முதல்–அமைச்சராக இருந்தேன். எனவே பிரதமர் மோடியிடம் முறையிட்டு அது சம்பந்தமாக 4 துறைகளிடம் ஒரே நாளில் ஆலோசனை செய்து தடையின்மை சான்று பெற்று, சட்டசபையில் ஒரே நாளில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான். இந்த ஜல்லிக்கட்டு நடைபெற அனைத்து தடைகளையும் உடைத்தெறிய மூலக்காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி தான். அவரால் தான் ஜல்லிக்கட்டு நடக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதே மோடியால் தான் மதுரையில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்பட உள்ளது.

இந்த பகுதி மக்கள் அலங்காநல்லூரை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனை இங்குள்ள அமைச்சர் உதயகுமார் நிறைவேற்றி கொடுத்து விடுவார். இங்குள்ள சாத்தியாறு அணை தூர்வாருவதற்கு ரூ.3½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழங்கள், காய்கறிகள் கெடாமல் இருக்க குளிர்சாதன வசதி கொண்ட கிடங்கு இந்த பகுதியில் கட்டித்தரப்படும்.

அரசு கல்லூரி இந்த பகுதி மக்களுக்கு கட்டித் தரப்படும். மேலும் நம்முடைய பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் கட்டித்தரப்படும். முல்லைப் பெரியாறு அணை 152 அடியாக உயர்த்தப்படும்.

இந்த தேர்தல் சிறந்த ஆட்சியை மக்களுக்கு வழங்கியது யார், மக்களுக்கு துரோகம் செய்தது யார் என்று எடைபோடும் தேர்தல் ஆகும். மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரசுடன் தி.மு.க. அங்கம் வகித்தது. அதில் 10 மந்திரிகளை பெற்றது. அவர்கள் எல்லாம் ஒரு கொலு பொம்மையாக தான் இருந்தார்கள். தமிழக மக்களுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் கடலில் போய் ரூ.40 ஆயிரம் கோடியை கொட்டியதாக கணக்கு சொல்கிறார்கள்.

நாங்கள் மக்களுக்கு நன்றாக பணியாற்றுகிறமா என்று வானத்தில் இருந்து ஜெயலலிதா கண்காணித்து கொண்டு இருக்கிறார். நாங்களும் ஜெயலலிதா எங்களை பார்த்து கொண்டு இருக்கிறார் என்று எண்ணி சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம். பொங்கல் பண்டிகையின் போது அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டபோது தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டுக்கு சென்றார்கள். நிச்சயம் தேர்தல் முடிந்த பின் உங்களுக்கு வழங்கப்படும்.

இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்று அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பது மட்டுமல்லாது மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும் நிச்சயம் உங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்ப்பார் என உறுதியளிக்கிறேன். தமிழகத்தில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி தேனி தொகுதி தான் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story