கட்டிட தொழிலாளி கொலை: உறவினரிடம் பழகியதை கண்டித்ததால் கள்ளக்காதலி வெறிச்செயல்


கட்டிட தொழிலாளி கொலை: உறவினரிடம் பழகியதை கண்டித்ததால் கள்ளக்காதலி வெறிச்செயல்
x
தினத்தந்தி 12 April 2019 11:56 PM GMT (Updated: 12 April 2019 11:56 PM GMT)

மதுரை ஊமச்சிகுளத்தில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். உறவினரிடம் பழகியதை கண்டித்ததால் கள்ளக்காதலியே திட்டமிட்டு தொழிலாளியை தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.

புதூர்,

மதுரை ஊமச்சிகுளம் திருமால்புரத்தை சேர்ந்தவர் ராஜரத்னம் (வயது 35). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்பத்தினர் திருவண்ணாமலையில் வசித்து வருகின்றனர். இதனால் ராஜரத்னம் மதுரையில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு ராஜரத்னத்தை மர்ம நபர்கள் கொலை செய்து அலங்காநல்லூர் சாலையில் பிணத்தை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் புதூர் போலீசார் ராஜரத்னம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு அறிவுரையின்பேரில் ஊமச்சிக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்–இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார், ராஜரத்னம் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜரத்னம் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:–

கொலை செய்யப்பட்ட ராஜரத்னத்திற்கும், வீரபாண்டி செல்லாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அம்பிகா(29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே அம்பிகா தனது உறவினரான மேலூர் கீழையூரை சேர்ந்த அஜீத்குமார்(23) என்பவருடன் பழகி வந்தார். அவருடனும் அவர் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அஜீத்குமாருடன் அம்பிகா பழகி வந்தது ராஜரத்னத்திற்கு தெரியவந்தது. இதனால் அம்பிகாவை அவர் எச்சரித்துள்ளார். மேலும் அஜீத்குமார் உடனான கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ராஜரத்னம் தன்னை கண்டித்தது குறித்து அம்பிகா, உறவினர் அஜீத்குமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராஜரத்னத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று அவரை அம்பிகா வீரபாண்டிக்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர்கள் பேசி கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த அஜீத்குமார், அவருடைய கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து ராஜரத்னத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இதனையடுத்து மேலூர் பகுதியில் பதுங்கியிருந்த அம்பிகாவையும், அஜீத்குமாரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கீழையூரில் பதுங்கியிருந்த அவர்களது கூட்டாளிகள் சின்னச்சாமி மகன் சசிக்குமார்(21), முருகேசன் மகன் ஜெயக்குமார்(20), முருகன் மகன் மற்றொரு அஜீத்குமார்(20), செல்வராஜ் மகன் அழகுசுந்தரம்(21) பாண்டிசெல்வம் மகன் கார்த்திகேயன்(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story