ஜி.எஸ்.டி. வரியால் சிறு தொழில்களை நசுக்கி தமிழகத்தின் முதுகெலும்பை மோடி உடைத்துவிட்டார் - ராகுல்காந்தி தாக்கு


ஜி.எஸ்.டி. வரியால் சிறு தொழில்களை நசுக்கி தமிழகத்தின் முதுகெலும்பை மோடி உடைத்துவிட்டார் - ராகுல்காந்தி தாக்கு
x
தினத்தந்தி 13 April 2019 12:30 AM GMT (Updated: 13 April 2019 12:13 AM GMT)

ஜி.எஸ்.டி.யால் சிறு தொழில்களை நசுக்கி தமிழகத்தின் முதுகெலும்பை மோடி உடைத்து விட்டார் என மதுரையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறினார்.

மதுரை,

மதுரை மண்டேலா நகரில், மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், திருச்சி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த தேர்தல் இரண்டு கருத்தியலுக்கான போராட்டம். காங்கிரஸ் கட்சி பல்வேறு பண்பாடு, கலாசாரம், மொழி, அணுகுமுறை ஒன்றாக இருக்க வேண்டுமென நினைக்கிறது. அதிகாரம் தனிமனிதன் கையில் இருக்க வேண்டும் என பா. ஜனதா கட்சி நினைக்கிறது. பா.ஜ.க. நாக்பூரில் உள்ள அமைப்பு தமிழகத்தை நிர்வகிக்க வேண்டுமென நினைக்கிறார்கள். தமிழக மக்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மிகுந்த அன்பை பெற்றவர்கள். அவமரியாதை செய்தால் அவர்களிடமிருந்து எதையும் பெற முடியாது.

தமிழக மக்கள் பெண்களுக்கு மதிப்பளிப்பவர்கள். தமிழக மக்கள் தான் இந்த தேர்தலில் வெல்லப்போகிறார்கள். தமிழக முதல்-அமைச்சரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் தமிழக மக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க மோடி எண்ணுகிறார். அது முடியாது. நாங்கள் தமிழகத்தை கட்டுப்படுத்த நினைக்கவில்லை. நாங்கள் தமிழக இளைஞர்கள், இளம்பெண்கள் மீது நீட் தேர்வை திணிக்க மாட்டோம். எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம் சமூக நீதி, நியாயம் மட்டுமே.

கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்திற்கு மோடி மிகப்பெரிய அநீதி இழைத்து விட்டார். ஒவ்வொரு இந்திய மக்களுக்கும் அவரவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக மோடி பொய் சொல்லியுள்ளார். அவர் சொன்ன திட்டத்தை நாங்கள் செய்வோம். இந்திய பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழை மக்களுக்கு ஆண்டிற்கு 72 ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டிற்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 5 கோடி குடும்பங்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் பையில் உள்ள பணத்தை மோடி பறித்து விட்டார். நமது பொருளாதார எந்திரத்தை மோடி மூடிவிட்டார். நடுத்தர மக்கள் பையில் உள்ள பணம் காங்கிரஸ் ஆட்சியில் பறிக்கப்படாது. மக்கள் பையிலிருந்து மோடி பறித்து விஜய் மல்லையா, நிரவ் மோடி, அனில் அம்பானி ஆகியோரிடம் கொடுத்துள்ள பணத்தை நாங்கள் பறித்து மக்களுக்கே வழங்குவோம். ஜி.எஸ்.டி.யால் சிறு குறு தொழில்களை நசுக்கி தமிழகத்தின் முதுகெலும்பை மோடி உடைத்து விட்டார்.

மோடி அரசு 5 கோடி வேலைவாய்ப்புகளை நசுக்கி விட்டது. மத்திய அரசில் 28 லட்சம் வேலை வாய்ப்புகள் காலியாக உள்ள நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 28 லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும். தமிழ்நாட்டில் உள்ள இளம்பெண்ணும் இளைஞனும் புதிய தொழில் தொடங்க வாய்ப்புகளை எளிமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3 ஆண்டுகளுக்கு பின் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய அரசின் பணியில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். வரும் தேர்தலில் மோடியை தோற்கடிக்கப்போகிறோம். இன்னும் சில நாட்களில் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவி ஏற்க போகிறார். தமிழ்நாட்டை தமிழர் நிர்வகிக்க வேண்டும். தமிழ்நாட்டை தமிழர்கள் தான் நிர்வகிக்க வேண்டும் என எங்களது கருத்தியல் கூறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story